Home Uncategorized உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிகள்: வாரன் பபெட்டின் முதலீட்டு மாயாஜாலம்

உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிகள்: வாரன் பபெட்டின் முதலீட்டு மாயாஜாலம்

முதலீட்டு தொழிலதிபர் வாரன் பபெட், கடந்த 60 ஆண்டுகளாக வகித்து வந்த தனது பெர்க்ஷையர் ஹாதவே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். முதலீட்டு துறையில் உலக ஜாம்பவானாக விளங்கும் இவரது பின்னணியைப் பற்றி சற்றே திரும்பிப் பார்ப்போம்.

இவர் ஒரு ஆன்மீகவாதியோ, அரசியல்வாதியோ, ஒரு நாட்டின் தலைவரோ, சினிமா நட்சத்திரமோ, விளையாட்டு வீரரோ அல்ல. ஆனாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு இவர் ஒரு குருவாகவும், ரோல் மாடலாகவும், கொண்டாடப்படும் ஹீரோவாகவும் திகழ்கிறார்.

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். பங்குச்சந்தையில் சிறிய தொகையை முதலீடு செய்து, அதை உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிகளாக மாற்றும் வித்தையை அறிந்தவர் இவர்.

அதே நேரத்தில், குறைத்து மதிப்பிடப்பட்ட தரமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, அவற்றை நீண்ட காலம் வைத்திருந்து மிகப்பெரிய லாபம் ஈட்டும் யுக்தி, முதலீட்டாளர்களுக்கு அவர் அளித்த முக்கியமான பாடங்களில் ஒன்றாகும்.

பங்குச்சந்தையில் இன்று பல கோடி பேர் பணக்காரர்களாக மாறியதற்கு, இவரது வழிகாட்டுதல்களும் ஒரு முக்கிய காரணமாக உள்ளன. பெரிதாக மினக்கிடாமல், மூளையையே முதலீடாக வைத்து செல்வத்தை குவித்த வாரன் பபெட்டின் சொத்து மதிப்பு சுமார் 15 லட்சம் கோடி ரூபாயாகும்.

உலகின் டாப் ஐந்து பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்திருந்த இவர், தனது நிறுவனத்தின் சொத்து மதிப்பு பல நாடுகளின் பொருளாதார மதிப்பை விட அதிகமாக இருப்பதற்கும் காரணமாக உள்ளார். உலக மகா கோடீஸ்வரராக இருந்தாலும், எளிமையே இவரது மிகப்பெரிய பலமாகும்.

பங்குச்சந்தை முதலீட்டில் சம்பாதித்த பணத்தின் 99 விழுக்காட்டை சமூக நலனுக்காக செலவிட்டவர் இவர். பிற தொழிலதிபர்களையும் ஏழை எளிய மக்களுக்காக செலவிட ஊக்குவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஊதியம் மட்டுமே உங்கள் வருவாய் என்றால், நீங்கள் ஏழ்மைக்கு மிக அருகில் உள்ளீர்கள்” என்ற இவரது அறிவுரை மிகவும் பிரபலமானது. நீங்கள் தூங்கும் போதும் கூட, உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “மற்றவர்கள் பேராசையுடன் இருக்கும் போது நீங்கள் அச்சப்பட வேண்டும்; பிறர் அச்சத்தில் இருக்கும் போது நீங்கள் பேராசைப்பட வேண்டும்” என்பதே பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான இவரது பொன்னான அறிவுரையாகும்.