Home Uncategorized “திருவண்ணாமலையில் சோழர் கால அதிசயம்”

“திருவண்ணாமலையில் சோழர் கால அதிசயம்”

திருவண்ணாமலை மாவட்டம், பாவுப்பட்டு கிராமம் அருகே, சோழர் காலத்தைச் சேர்ந்த ஒரு அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலை அடிவாரப் பகுதியில் கிடைத்த இந்த கல்வெட்டு, கிபி 1200ஆம் ஆண்டு, மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு இயற்கை நீர் ஊற்றை புலவர் அடியான் ஒற்றிக்கொண்டான் திருவானை முகவன் என்பவர் கண்டுபிடித்து, அதற்கு “சித்திரமேழி பேரூற்று” என பெயரிட்டு, அக்காலத்தில் இருந்த பெரிய வேளாண் சங்கமான சித்திரமேழி பெரியநாட்டார் சபைக்கு தானமாக வழங்கியதாக கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த நீர் ஊற்று, இன்றும் நீர் வற்றாமல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது அந்த ஊற்றை அப்பகுதி மக்கள் “ஊத்துக்குட்டை” என்று அழைக்கின்றனர்.

இந்த கல்வெட்டு, சோழர் காலத்தில் தமிழர்கள் நீர் மேலாண்மையில் எவ்வளவு முன்னேறியிருந்தனர் என்பதற்கான முக்கிய வரலாற்று ஆதாரமாக கருதப்படுகிறது. மேலும், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் பெயர்களும் இன்றும் வழக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த கல்வெட்டை, தொல்லியல் துறை முறையாக ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.