திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவர் காவல்கவுண்டம்பட்டியில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். சிவசுப்பிரமணியன் தனது தாய் மற்றும் சகோதரன் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு சிவசுப்பிரமணியன் வீட்டின் வெளியே வராண்டாவில் கயிற்றுக் கட்டிலில் தூங்கியுள்ளார். குடும்பத்தினர் வீட்டினுள் தூங்கினர். 20ஆம் தேதி அதிகாலை குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, சிவசுப்பிரமணியன் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து புத்தானத்தம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மணப்பாறை டிஎஸ்பி காவியா, பயிற்சி டிஎஸ்பி விக்னேஷ் மற்றும் புத்தானத்தம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை மற்றும் தடயவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்பநாய் ‘நிலா’வும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகள் குறித்த தடயங்கள் கிடைக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
சிவசுப்பிரமணியனின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய, திருச்சி எஸ்பி செல்வநாக நாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 20ஆம் தேதி அதிகாலை 1.20 மணியளவில் கையில் இரும்பு ராடுடன் அடையாளத்தை மறைத்த நிலையில், 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து சென்றது பதிவாகி இருந்தது.
சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் உயரம் மற்றும் முக ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவ ஒற்றுமை வரைந்ததில், அவர் காவல்காரன்பட்டியைச் சேர்ந்த 25 வயதான ராதாகிருஷ்ணன் என போலீசார் சந்தேகித்தனர்.
விசாரணையில், ராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட சிவசுப்பிரமணியனின் உறவினரான 15 வயது சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததும், இதனை அறிந்த சிவசுப்பிரமணியன் அந்தக் காதல் விவகாரம் தொடர்பாக அந்தச் சிறுமியை கண்டித்ததும் தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது காதலியின் செல்போன் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். சம்பவத்திற்கு முன்பும், சம்பவத்திற்கு பின்பும் இருவரும் செல்போனில் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் பதுங்கியிருந்த ராதாகிருஷ்ணனை செல்போன் எண் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், தனது காதலியிடம் காதலை கைவிடுமாறு சிவசுப்பிரமணியன் வற்புறுத்தியதால், அவர் மீது ஆத்திரமடைந்து இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததாக ராதாகிருஷ்ணன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மேலும், இக்கொலைக்கு தூண்டுகோலாக அவரது 15 வயது காதலி இருந்ததும் தெரிய வந்தது.
அதேபோல், ராதாகிருஷ்ணனின் தம்பி சேரன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிவநேச செல்வன் ஆகிய இருவரும் குற்றவாளியை தப்ப வைக்கும் நோக்கில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, கொலைக்கு பயன்படுத்திய பொருட்களை பதுக்கி வைக்கவும், அவரை பேருந்தில் ஏற்றி அனுப்பவும் உதவி செய்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, ராதாகிருஷ்ணன், அவரது 15 வயது காதலி, தம்பி சேரன் மற்றும் சிவநேச செல்வன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காதலை கைவிடக் கூறி கண்டித்த உறவினரை, காதல் விவகாரம் காரணமாக கொலை செய்த இந்த சம்பவம், மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








