Home Uncategorized “திருக்குறள் காட்டும் மழையின் இரு முகங்கள்”

“திருக்குறள் காட்டும் மழையின் இரு முகங்கள்”

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பொருள்:

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் இருந்து மீண்டும் அவர்களைக் காக்க வல்லதும் மழையாகும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வான்சிறப்பு
அணி: குறளில் பயின்று வந்துள்ள அணி சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.இதில் சொற்களும், அவை உணர்த்தும் பொருளும் மீண்டும் மீண்டும் வருவதாலேயே இந்த அணி பயின்று வருகிறது.

ஒரு கிராமத்தில் கதிர்வேல் என்ற விவசாயி இருந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால், அவர் நிலம் வெடித்துக் கிடந்தது. கடன் சுமை ஏறியது, கால்நடைகள் தாகத்தால் வாடின. “இந்த மழையால்தான் என் வாழ்வே அழிந்துவிட்டது” என்று மழையைச் சபித்துக் கொண்டே ஊரை விட்டு வெளியேற முடிவெடுத்தார்.

அவர் கிளம்பும் அன்று வானம் கறுத்தது. திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. அந்த மழை அடுத்த சில நாட்களுக்கு நீடித்தது. கதிர்வேல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காய்ந்து போயிருந்த கிணறு நிரம்பியது

. வறண்டிருந்த நிலம் ஈரமாகிப் புத்துயிர் பெற்றது.அப்போது கதிர்வேல் உணர்ந்தார்: “எந்த மழை பெய்யாமல் என்னைத் தவிக்க வைத்ததோ, அதே மழைதான் இன்று மீண்டும் எனக்கு வாழ்வு கொடுத்து என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது”.

நீதி:
மழை பெய்யாமல் ஒருவரை வறுமையில் தள்ளவும் வல்லது; அதே வறுமையில் வாடுபவர்களுக்குத் துணையாக நின்று அவர்களைக் காக்கவும் வல்லது.