Home உலகம் ”நோபல் பரிசுக்கும் ஈரான் சிறைச்சாலைக்கும் இடையில் நர்கீஸ் முகமதி”

”நோபல் பரிசுக்கும் ஈரான் சிறைச்சாலைக்கும் இடையில் நர்கீஸ் முகமதி”

ஈரான் நாட்டில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளரும், 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான நர்கீஸ் முகமதிக்கு, ஈரான் நீதிமன்றம் மேலும் ஏழு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

ஏற்கனவே பல வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கூடுதல் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டது, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதனுடன், அவருக்கு இரண்டு ஆண்டுகள் பயணத் தடை மற்றும் சிறை தண்டனை முடிந்த பின் குறிப்பிட்ட பகுதியில் தங்க வைக்கப்படும் உள் இடம்பெயர்வு உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்ட நர்கீஸ் முகமதி, சிறையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு மருத்துவ வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த தீர்ப்புக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, நோபல் பரிசு பெற்ற ஒருவருக்கு இவ்வாறு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளின் நிலையை கேள்விக்குறியாக்குவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பெண்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் நர்கீஸ் முகமதிக்கு விதிக்கப்பட்ட இந்த கூடுதல் சிறைத் தண்டனை, உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.