Home ஆரோக்கியம் “அவசர உணவு பழக்கம்: இதய ஆரோக்கியத்திற்கு எச்சரிக்கை”

“அவசர உணவு பழக்கம்: இதய ஆரோக்கியத்திற்கு எச்சரிக்கை”

உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது, நாளடைவில் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கே ஆபத்தாக மாறக்கூடும். அதற்கு மாறாக, உணவை மெதுவாக உடல்நலனுக்கு ஏற்ற முறையில் சாப்பிடுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

‘ஃபாஸ்ட் ஃபுட்’, ‘க்விக் மீல்ஸ்’ என உணவுகளின் பெயர்களிலேயே வேகத்தை உணர்த்தும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். நேரத்தை கருத்தில் கொண்டு பலர் உணவை விரைவாக சாப்பிடுகின்றனர்.

கைபேசி, தொலைக்காட்சி போன்ற திரைகளை பார்த்துக்கொண்டே உண்பதும் இன்று சாதாரணமாகி விட்டது. இவை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்பதை அறிந்திருந்தும், அதனால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களை நாம் பெரிதாக கவனிக்காமல் இருப்பது, அபாயத்தை அறியாமலே இருப்பதற்குச் சமமாகும்.

‘நியூட்ரிஷன் பிரண்ட்ஸ்’ என்ற அமைப்பு 2021ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், அவசர அவசரமாக உண்பது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

மேலும், ‘நேச்சர்’ இதழில் 2024ஆம் ஆண்டு வெளியான ஆய்வில், இவ்வகை உணவுப் பழக்கம் கல்லீரலில் கொழுப்பு படியும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று உண்ணாமல் அவசரமாக விழுங்குவதால், உணவு சரியாக அரைக்கப்படாமல் நேரடியாக வயிற்றுக்குள் செல்கிறது. இதனால் அதிக அளவில் காற்றும் வாய் வழியாக உடலுக்குள் செல்வதால், வயிற்று வீக்கம் மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மெதுவாக மென்று உண்ணும் போது, குடல்–மூளை இடையிலான தகவல் பரிமாற்றம் சரியாக நடைபெறுகிறது. இதனால் உணவு உண்ட திருப்தி கிடைப்பதுடன், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

அதனால் நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், விதைகள் போன்ற மென்று உண்ணக்கூடிய உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாறாக, அதிகமாக பதப்படுத்தப்பட்ட விரைவு உணவுகள் உடலில் கலோரியை அதிகரித்து, உடல் பருமனை ஏற்படுத்தும். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து உண்பது, உணவை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதுடன், மெதுவாக சாப்பிடவும் உதவுகிறது. உணவு உண்பது என்பது ஒரு சமூக பழக்கம் என்பதை மறக்காமல், உணவை முழுமையாக அனுபவித்து உண்ண வேண்டும்.