உத்தரப் பிரதேச மாநிலத்தின் “பிஜ்னோர்”பகுதியைச் சேர்ந்தவர் நவீஸ். 35 வயதான அவருக்கு யாஸ்மீன் என்ற பெண்மணியுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு பிள்ளைகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு யாஸ்மீன் மரணமடைந்தார்.
தனிமையில் இருந்த நவீஸ், நான்கு வருடங்களுக்கு முன்பு உறவுக்கார பெண்ணான ஷபேபை காதலித்தார். இரண்டாவது திருமணத்திற்காக வேறு ஒருவரை காதலித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அதுவே இக்கட்டான சூழ்நிலைக்குக் காரணமாகிவிட்டது.
நவீஸ் காதலித்த ஷபேபை, உண்மையில் அவரின் உறவினர் ஷவகீனின் மனைவி. மைத்துனி உறவு கொண்ட ஷபேபை மீது நவீஸ் ஆழ்ந்த காதல் கொண்டார். அந்த பெண்ணும் தன்னுடைய கணவனைக் கூட மறந்துவிட்டு நவீஸின் காதலை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கும் விஷயம் சென்றது. ஷபேபை நவீசுடன் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்ததால், இருவரையும் பிரிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
மனைவியைப் பறிகொடுத்த ஷவகீன், நவீஸுக்கு எதிராக கொலைவெறியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நவீஸும் ஷபேபும் ஊரை விட்டு வெளியேறி சகாரன்பூர் பகுதியில் வசித்துவந்தனர். நான்கு ஆண்டுகளாக அவர்கள் ஊருக்குள் வரவே இல்லை. இந்நிலையில், நவீஸின் தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். தகவல் அறிந்த நவீஸ், உடனே ஊருக்கு வந்து தாயின் இறுதி சடங்குகளை நடத்தினார்.
மாலை 3.00 மணிக்கு சடலத்தை அடக்கம் செய்ய கல்லறைக்கு கொண்டு சென்றபோது, திடீரென அங்கு வந்த ஷவகீன் மற்றும் அவரது நண்பர்கள், செங்கல், கட்டை போன்றவற்றால் நவீசை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். ரத்தக் குளத்தில் சரிந்த நவீஸை உறவினர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் அடைந்த காயத்தால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்குட்பட்டதாக ஷவகீன் உட்பட 10 பேர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, ஷவகீனை கைது செய்துள்ளனர். மேலும் ஓடிப்போனவர்களைத் தேடி வருகின்றனர்.








