ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிய கார்கள் 350 சிசி திறனுக்கு கீழான இருசக்கர வாகனம் மீதான ஜிஎஸ்டி வரி 28% இருந்து 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சொகுசு கார்கள் மீதான வரி 40% எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்களின் விலை குறித்து மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி பார்கவா பேசியிருக்கிறார்.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த வரிவிதிப்பு இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஐந்து மற்றும் 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40% வரியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 மீட்டர் நீளத்திற்கு குறைவாக உள்ள கார்களுக்கான ஜிஎஸ்டி 28 விழுக்காட்டில்லிருந்து 18 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆல்டோவின் விலை 40,000 இருந்து 50,000 வரையும் வேகன்ஆன் விலை 60,000 இருந்து 67,000 வரையும் குறையக்கூடும் என மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி பார்கவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது சமீபத்திய ஜிஎஸ்டி குறைப்புடன் சரிந்து கொண்டிருந்த சிறிய கார் சந்தை இந்த ஆண்டு 10%த்திற்கும் மேலாக வளரும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இதன் விளைவாக ஒட்டுமொத்த பயணிகள் கார் சந்தை ஆறிலிருந்து 8% வளர்ச்சி அடையும் எனவும் பார்க்கவா குறிப்பிட்டார்.
சொகுசு கார்களுக்கு கூட செஸ் வரிவிதிப்பிற்கு பிறகு செலுத்தப்படும் ஜிஎஸ்டி 43%த்தில் இருந்து 50% வரை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது 40%ஆக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டியை 28% இருந்து 18%ஆக குறைப்பதாக கவுன்சில் அறிவித்தது. 1200 சிசி என்ஜின்களுக்கு மேல் மற்றும் 4 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட கார்களுக்கு ஜிஎஸ்டி 40 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








