கர்நாடக மாநிலம் அட்டிபளை பகுதியைச் சேர்ந்த 37 வயதான வித்யா, மேட்ரிமோனியல் இணையதளத்தின் மூலம் வரன் தேடி வந்தார். அந்த நேரத்தில் பசவராஜ் என்ற நபரின் ப்ரொஃபைல் கவனத்தில் பட்டதால், இரு குடும்பங்களும் பேசிக் கொண்டு முடிவு செய்து, கொரோனா காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகளில், அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி முதல் வித்யாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மார்ச் 7ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் பாதரசம் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
வித்யாவின் உடல் முழுவதும் பரவிய பாதரச விஷம், சிறுநீரகம் உள்ளிட்ட பல உள்ளுறுப்புகளை சேதப்படுத்தியிருந்தது. தன் உடலில் பாதரசம் கலந்து இருப்பது எப்படி என்று குழம்பிய வித்யாவுக்கு, இறுதியில் தனது கணவர் மீதுதான் சந்தேகம் எழுந்தது. திருமணமான நாளில் இருந்தே பசவராஜுக்கு வித்யா பிடிக்கவில்லை; “அழகு இல்லை” என்று திட்டி, அடித்து, சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் அடைத்து வைத்து, மனரீதியிலும் உடல் ரீதியிலும் துன்புறுத்தி, அவமானப்படுத்தியும் வந்துள்ளார்.
பிப்ரவரி 25ஆம் தேதி இரவு தூங்கிய வித்யா, மறுநாள் காலை எழுந்தபோது தனது வலது தொடையில் ஊசி போட்டதற்கான தடயங்களை கண்டார். அதன் பின்னரே அவரின் உடல் நிலை மோசமடைந்தது. ஊசி மூலம் தான் பாதரசத்தை செலுத்தியிருக்கிறார் என வித்யா தனது கணவர் பசவராஜை சந்தேகித்தார்.
பாதரச விஷத்தால் வித்யாவின் உடல்நிலை மேலும் மேலும் மோசமடைந்து, கடந்த ஒன்பது மாதங்களாக அவர் தீவிர சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. நரக வேதனை போன்ற துயரத்தை வித்யா அனுபவித்து வந்தார். இந்த நிலையில், தன்னுக்கு நேர்ந்த பயங்கர அனுபவத்தையும், கணவர் பசவராஜ் பாதரச ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதையும் வித்யா வாக்குமூலம் அளித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையில், சிகிச்சை பலன் அளிக்காததால் வித்யா மரணமடைந்தார். வித்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பசவராஜ் மற்றும் அவரது தந்தை மாரிஸ் வர்மாச்சாரி ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பின்னரே இந்த சம்பவத்தின் முழு பின்னணி வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








