Home இந்தியா “வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி! இந்தியாவின் 8 நகரங்களில் விலை ஏற்றம்”

“வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி! இந்தியாவின் 8 நகரங்களில் விலை ஏற்றம்”

இந்தியாவின் 8 நகரங்களில் வீட்டு விலை உயர்வு: சென்னை உட்பட 7% முதல் 19% வரை ஏற்றம்

சென்னை உட்பட இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீட்டு விலைகள் 7 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை உயர்ந்துள்ளன என்று மனை வர்த்தக நிறுவனம் ப்ராப் டைகர் (PropTiger) தெரிவித்துள்ளது.

ப்ராப் டைகர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, பூனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் வீட்டு விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

குறிப்பாக தலைநகர் டெல்லி மற்றும் முக்கிய ஐடி மையங்களான பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் கடந்த ஒரு ஆண்டில் இரட்டை இலக்க விகிதத்தில் வீட்டு விலை அதிகரித்துள்ளது.

இந்த ஆய்வில் 2024 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டு விலை நிலவரங்கள், 2023 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், டெல்லியில் வீட்டு விலை ₹7,479 இலிருந்து ₹8,900 ஆக உயர்ந்து 19 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் ₹7,713 இலிருந்து ₹8,870 ஆக 15 சதவீதம், ஹைதராபாத்தில் ₹6,858 இலிருந்து ₹7,750 ஆக 13 சதவீதம், சென்னையில் ₹6,581 இலிருந்து ₹7,173 ஆக 9 சதவீதம், பூனேவில் ₹6,651 இலிருந்து ₹7,250 ஆக 9 சதவீதம், கொல்கத்தாவில் ₹5,611 இலிருந்து ₹6,060 ஆக 8 சதவீதம், அகமதாபாத்தில் ₹4,467 இலிருந்து ₹4,820 ஆக 7.9 சதவீதம், மற்றும் மும்பையில் ₹12,383 இலிருந்து ₹13,250 ஆக 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

விலை உயர்வின் காரணமாக சொகுசு வீடுகளுக்கான தேவை அதிகரித்தது, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்தது, மேலும் நிலத்தின் விலை அதிகரித்தது ஆகியவை முக்கிய காரணங்கள் என ப்ராப் டைகர் நிறுவனம் தெரிவித்துள்ளது.