வைஃபை மூலம் தகவல் தொடர்பு மற்றும் இணைய தொடர்புகளை நாம் மேற்கொள்கிறோம். அதைப் போலவே, கம்பியில்லாமல் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கம்பியில்லா மின்சாரத் தொழில்நுட்பம் தற்போது மின் வாகனங்களில் சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, மின்னூட்டத் தரைவிரிப்புகள் மீது வாகனத்தை நிறுத்தி சார்ஜ் செய்யலாம்.
மேலும், பாரிஸ் அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலையின் 1.5 கிலோமீட்டர் நீளப்பகுதி, அதனை கடந்து செல்லும் மின் வாகனங்களுக்கு இயக்கத்திலேயே சார்ஜ் வழங்குகிறது.
2017ல் டிஸ்னி ஆராய்ச்சி குழு சுவர்களையும் ஒரு தாமிரக் கம்பத்தையும் பயன்படுத்தி ஒரு அறைக்குள் கம்பியில்லா மின்சாரத்தை வெற்றிகரமாக உருவாக்கியது.
2021ல் டோக்கியோ பல்கலைக்கழகமும் ஒரு வீட்டைப் போன்ற அமைப்பில் இதை நடைமுறைப்படுத்தியது. 2012ல் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம், லேசர் மோட்டி (Laser Motive) நிறுவனத்துடன் இணைந்து 600 மீட்டர் தொலைவுக்கு மின்சாரத்தை வெற்றிகரமாக அனுப்பியது. 2015ல் ஜப்பானின் JAXA நிறுவனம் 55 மீட்டர் தூரத்திற்கு கம்பியில்லா மின்சாரத்தை அனுப்பியது.
2022ல் அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி ஆய்வகம் 1.6 கிலோவாட் மின்சாரத்தை 1 கிலோமீட்டர் தூரத்திற்கு அனுப்பி சாதனை படைத்தது. 2025ல் அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி முகமை ஒன்று 8.6 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்சாரம் அனுப்பியதே தற்போது வரை மிகப்பெரிய சாதனையாகும்.
ஆனாலும், கம்பியில்லா மின்சாரத் தொழில்நுட்பத்தின் செலவு, பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்கான தாக்கங்கள் குறித்து இன்னும் பல கேள்விகள் உள்ளன.
தற்போது இது ஸ்மார்ட் பூட்டுகள் போன்ற குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் சாதனங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. நம்முடைய வீடுகளில் முழுமையாக கம்பியில்லா மின்சாரம் வர இன்னும் காலம் ஆகலாம்.








