சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் பிரிவு சாலையில் தனியாருக்கு சொந்தமான மொபைல் போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை செயல்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் கடை திறந்து விற்பனை நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மத்தியம் திடீரென கடைக்குள் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மலமலவென பரவி கடை முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் அதிக அளவில் புகைமூட்டம் காணப்பட்டது.
மேலும் இந்த செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த மருந்தகம் மற்றும் டைலரின் கடை என இரண்டு கடைகளுக்கும் தீ பரவியது.
தீ முழுமையாக பரவி எரிந்து கொண்டிருந்த நிலையில் தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த ஓமலூர் தீய அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் போராடி இந்த தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக சேலம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த மூன்று கடைகளிலும் இருந்து வெளியேறும் கரும்புகை அந்த சாலை முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் பரவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து இந்த தீயை தற்பொழுது தீயணைப்பு வீரர்கள் முழுமையாக அணைத்துள்ளனர். இந்த திடீர் தீவிபத்து குறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புகள் மற்றும் அதிக அளவில் கடைகள் உள்ள இந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் காவல் துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர் .








