தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூலை மாதம் வரை டிஜிட்டல் கைது முதலீடு மோசடி போன்ற சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள்1,0 10 கோடி ரூபாய் பணத்தை இழந்திருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சைபர் கிரைம் மோசடி எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும் சில சைபர் கிரைம் குற்றவாளிகளை கைது செய்த போதிலும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடு இல்லை.
தற்போது தமிழகத்தில் மட்டுமே இந்த சைபர் கிரைம் மோசடிகளால் கடந்த ஏழு மாதங்களில் 1,010 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
சைபர் கிரைம் மோசடி தொடர்பாக ஏழு மாதத்தில் 88479 புகார்கள் தரப்பட்டுள்ளதாகவும் தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். சைபர் கிரைம் மோசடியில் இருந்த பணத்தில் 314 கோடி ரூபாயை தமிழக சைபர் கிரைம் போலீசார் முடக்கி இருப்பதாகவும் அதில் 62 கோடி ரூபாய் மீட்டு புகார் அளித்தவரிடம் கொடுத்துள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
முதலீடு தொடர்பான மோசடிக்கு 492 கோடி ரூபாய் இழந்துள்ளதாகவும் டிஜிட்டல் கைது மூலமாக பொதுமக்கள் 97 கோடி ரூபாய் வரை இழந்துள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏழு மாதத்தில் மட்டும் 18 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழக சைபர் கிரைம் போலீசார், மோசடியில் சிக்காமல் 153 பொதுமக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் காப்பாற்றி உள்ளதாகவும் தொடர்ந்து சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக பொதுமக்களை பயம், பேராசை, பாலியல் இச்சை, அறியாமை ஆகியவற்றை வைத்து மட்டுமே சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்வதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
மோசடி கும்பலிடம் ஏமாந்தால் 1930 என்ற நம்பர் தொலைபேசி எண்ணுக்கும் அதேபோல் சைபர் கிரைம் போர்ட்டலிலும் பதிவிட்டு பொதுமக்கள் தங்களை புகாரை தெரிவித்தால் பணத்தை மீட்டெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.








