Home இந்தியா “ஒவ்வொரு மூச்சிலும் மறைந்திருக்கும் அபாயம் – நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!”

“ஒவ்வொரு மூச்சிலும் மறைந்திருக்கும் அபாயம் – நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!”

சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் நுண்நெகிழிகள் பரவி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER), எய்ம்ஸ்-கல்யாணி, மற்றும் சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், இந்நகரங்களின் காற்றில் நுண்நெகிழி துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மைக்ரோமீட்டருக்கும் குறைவான அளவிலான இச்சிறிய நெகிழித் துகள்கள் மனித நுரையீரலின் ஆழமான பகுதிகளுக்குள் சென்று சேரக்கூடியவை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் தியாகராயநகர், பாரிமுனை போன்ற பகுதிகளில் சேகரிக்கப்பட்ட காற்று மாதிரிகளில், ஒரு கனமீட்டர் காற்றில் சராசரியாக நான்கு மைக்ரோகிராம் நெகிழித் தூள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய துகள்களை சுவாசிப்பதால் புற்றுநோய், சுவாச கோளாறுகள் உள்ளிட்ட 72 வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒரு நபர் சென்னையில் தினசரி சுமார் 190 நுண்நெகிழித் துகள்களை சுவாசிக்க நேரிடுகிறது என்றும், இத்துகள்கள் உடலில் குவிந்து பல்வேறு உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.