Home இந்தியா “ஒரு பெண் கைது: டெல்லி வெடி வழக்கில் புதிய திருப்பம்!”

“ஒரு பெண் கைது: டெல்லி வெடி வழக்கில் புதிய திருப்பம்!”

டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஷகீனா சாஹித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி செங்கோட்டை அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் நடந்த கார் வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து தீவிரமான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் ஷகீனாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், டெல்லி கார் வெடிப்பில் ஈடுபட்ட காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் உமருக்கு இந்த பெண் மருத்துவர் உதவி செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஷகீனா, ‘ஜெய்.சி. முகமது’ எனும் தீவிரவாத அமைப்பின் மகளிர் பிரிவுக்கான இந்திய தலைவராக செயல்பட்டு வந்ததாகவும், அவரின் காரிலிருந்து வெடிபொருட்களும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பரிதாபாத்தில் முசமில் அகமது கனாய் மற்றும் மஜித் ராதர் எனும் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பெருமளவில் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மூன்றாவது நபராக மற்றொரு மருத்துவரை போலீசார் தேடி வந்தனர். அவர் தற்கொலைத் தாக்குதல் நடத்திய உமர் ஆக இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இதனிடையே, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் யூடியூபர் ஒருவர் பொதுமக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது பதிவான காட்சிகளும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இந்நிலையில், கார்வெடிப்பு சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை செயலாளர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் டிஜிபி காணொலி வழியாக கூட்டத்தில் பங்கேற்றார்.