நடிகர் அபினய் உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி, அபினையை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் எழுதிய உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.
கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்காக பணமின்றி தவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடல்நலம் மேலும் குன்றிய அவர், அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி, சிகிச்சை பலனின்றி தனது 44வது வயதில் உயிரிழந்தார்.
அவரது மறைவு திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
“சென்னை 28 திரைப்படத்திற்குப் பிறகு, நான் ஒரு சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்தில் நடிகர் அபினையுடன் இணைந்து நடித்தேன். அப்போது அவர் விளம்பர உலகில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.
அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நான்கு நாட்கள் நடைபெற்றது. அங்கே எனக்கென ஒரு அபார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டது; அதே அறையில் தங்கிய இன்னொரு ஆண் நடிகர் அபினய்தான்.
படப்பிடிப்பு முடிந்து இரவு திரும்பியபோது, நான் அறைக்குள் சென்றுவிடுவேன். ஆனால் அவர் வரவேற்பு பகுதியில் தனியாக அமர்ந்து குடித்து கொண்டிருப்பார்.
நான் கதவை திறந்து பார்க்கும் போதெல்லாம் அவர் அமைதியாக ஒரு முழு பாட்டிலையும் முடித்து தன்னை மறந்து கிடப்பார்.
இளம் நடிகர் ஒருவரை இவ்வாறு தனிமையில் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மனம் மிகவும் கனமாக இருந்தது.ஒரு நாள் இரவில் அவர் குடித்து கொண்டிருக்கும்போது, ‘குடிக்கிறீங்களா?’ என்று கேட்டார். நான் ‘பழக்கம் இல்லை’ என்றதும், ‘அப்படியெனில் ஜூஸ் குடி’ என்றார்.
என்னுள் ஏதோ தயக்கம் ஏற்பட்டது. ‘ஏன் இப்படி குடிக்கிறீர்கள்? நீங்கள் நன்றாக உழைக்கும் வெற்றியாளர்; இப்படிப்பட்ட பழக்கம் ஏன்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், தாயார், அழுத்தங்கள், வலிகள், தனிமை—இவையனைத்தையும் குறித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.நான் எதுவும் சொல்லாமல், அவர் மனத்தில் இருந்ததை எல்லாம் வெளியேறட்டும் என அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்தில் விடைபெறும்போது, அபினய் என்னிடம்,‘நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வாழ்க்கையை இவ்வளவு கவனமாக கேட்டதில்லை. கடவுள் இப்படியும் சில பெண்களை படைக்கிறாரா? ஒருவேளை உனக்கு இரட்டை சகோதரி இருந்தால் சொல்லு,’ என்றார்.
நான் சிரித்து அவரை கட்டியணைத்து வழியனுப்பினேன்.அதுவே எங்கள் கடைசி சந்திப்பு.இப்போது அவர் மறைந்துவிட்டதாகக் கேட்கும்போது எனக்கு அழுகை வருகிறது. ஆனால் அது வருத்தத்தால் அல்ல — அவர் தனது போராட்டத்தை முடித்து அமைதியை அடைந்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RIP என சொல்ல மாட்டேன்; Party big, buddy! எனச் சொல்வேன். ஏனெனில் இம்முறை அவர் தனது வலிகளை நினைத்து குடிக்க மாட்டார் — விடுதலையை ருசித்து குடிப்பார்.”
நடிகை விஜயலட்சுமி எழுதிய இந்த உருக்கமான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.








