Home உலகம் “பாகிஸ்தான் மருந்துகளுக்கு ஆப்கான் தடை: இந்தியாவிற்கு புதிய வாய்ப்பா?”

“பாகிஸ்தான் மருந்துகளுக்கு ஆப்கான் தடை: இந்தியாவிற்கு புதிய வாய்ப்பா?”

கடந்த மாதம் முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. எல்லை பிரச்சினையால் ஏற்பட்ட இந்த மோதல், கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் மேலும் மோசமடைந்தது.

அதற்கு பதிலாக, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் உயிரிழந்தனர். சில நாட்கள் நடந்த பதற்றத்திற்கு பிறகு, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலைமை தற்காலிகமாக சீரானது.

இருப்பினும், இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் விரிசல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக, பாகிஸ்தானிலிருந்து மருந்துகள் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என தாலிபான் அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம், தங்கள் நாட்டு வர்த்தகர்கள் பாகிஸ்தானிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தானிய மருந்துகளை வாங்கும் ஆப்கான் வர்த்தகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

“உங்களுக்கு மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. அதன் பிறகு பாகிஸ்தானில் இருந்து வரும் எந்த மருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்படாது” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் முல்லா அப்துல் கனி பராதர் இதுகுறித்து பேசும்போது, பாகிஸ்தானிய மருந்துகளின் தரம் மிகவும் குறைவாக இருப்பது ஆப்கானிஸ்தானின் சுகாதாரத் துறைக்குப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், பாகிஸ்தான் அடிக்கடி வர்த்தக எல்லைகளை மூடுவதால், வர்த்தகர்கள் பெரும் நிதியழப்பை சந்தித்து வருவதாகவும், அவர் தெரிவித்தார். இதனால், ஆப்கான் வர்த்தகர்கள் பாகிஸ்தானுக்கு பதிலாக மாற்று விநியோக வழிகளைத் தேட வேண்டும் என்று தாலிபான் அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த தடைக்கு பின்னர், ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் இனி இந்தியாவிலிருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதென பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானைத் தவிர, ஆப்கானிஸ்தானுக்கு மருந்து வழங்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்த நடவடிக்கை, அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளில் நிலவும் பதற்றத்தின் தீவிரத்தை வெளிக்காட்டுகிறது.