Home உலகம் ”செவ்வாயில் இருக்கவே கூடாத பாறை! நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி”!

”செவ்வாயில் இருக்கவே கூடாத பாறை! நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி”!

செவ்வாய் கிரகம் தினமும் ஒரு புதிய ஆச்சரியத்தை நமக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், இப்போது நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் அங்கே முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு விசித்திரமான பாறையை கண்டுபிடித்திருக்கிறது. அந்த பாறை அங்கு இருக்கவே கூடாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வாங்க, அந்த மர்ம பாறையைப் பற்றி முழுவதும் பார்க்கலாம்.

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் ஜெசிரோ கிரேட்டர் பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, சுமார் 80 செ.மீ., அதாவது ஒரு சிறிய மேசையின் அளவிலான ஒரு பாறையை கண்டுபிடித்தது. அந்தப் பாறையைச் சுற்றி உள்ள மற்ற பாறைகள் எல்லாம் தட்டையாக உடைந்திருந்தபோதும், இந்த பாறை மட்டும் வித்தியாசமான வடிவில் தனியாக நின்றது. இந்த விசித்திரமான பாறைக்கு நாசா விஞ்ஞானிக”Phippsaksla”  எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்தப் பாறையைப் பார்த்தவுடன் விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் கூடிய குழப்பத்தில் ஆழ்ந்தனர். உடனடியாக ரோவரில் உள்ள Super Cam லேசர் மற்றும் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவிகளை பயன்படுத்தி அந்தப் பாறையை ஆய்வு செய்தனர். அப்போதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியானது — இந்தப் பாறையில் இரும்பும் நிக்கலும் மிக அதிக செறிவில் இருந்தன. செவ்வாய் கிரகத்தின் இயல்பான பாறைகளில் இந்தத் தனிமங்கள் இவ்வளவு அதிகமாக இருப்பது மிகவும் அரிதானது.

அப்படியானால் இந்தப் பாறை செவ்வாய் கிரகத்துக்கானது அல்ல என்றால், இது எங்கிருந்து வந்தது? இதுதான் இந்தக் கதையின் முக்கிய பகுதி.

பெரிய சிறுகோள்களின் மையப் பகுதிகளில் மட்டுமே இத்தகைய இரும்பு–நிக்கல் பாறைகள் உருவாகும். அதனால் விஞ்ஞானிகள் என்ன நம்புகின்றனர் என்றால், இந்தப் பாறை பல லட்சம் அல்லது கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மீது விழுந்த ஒரு விண்கல்லாக இருக்கலாம் என்பது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உண்மையிலேயே ஒரு ‘ஏலியன்’ பாறையை கண்டுபிடித்திருக்கிறது.

இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் கியூரியாசிட்டி ரோவரும் இதே மாதிரியான சில விண்கற்களை கண்டுபிடித்துள்ளது. ஆனால் பெர்சவரன்ஸ் ரோவர், ஜெசிரோ கிரேட்டர் பகுதிக்கு வெளியே இவ்விதமான பாறையை முதன்முறையாக கண்டறிந்துள்ளது.

இந்தப் பாறை உண்மையிலேயே விண்கல்லா என்பது உறுதிப்படுத்த நாசா இன்னும் சில விரிவான ஆய்வுகளை செய்ய உள்ளது. பிரபஞ்சத்தின் ரகசியங்கள் இப்படிப் பாறைகளில் புதைந்து கிடப்பதை நினைத்தாலேயே ஆச்சரியமாக இல்லையா?