உலகத்தில் உள்ள மர்மமான இடங்களில் ஒன்றாக கருதப்படுவது பெர்முடா முக்கோணம். இந்த மர்மமான பகுதியில் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அது என்ன? பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் இந்த மர்மத்திற்கு இதன் மூலம் விடை கிடைத்துவிட்டதா? பெர்முடா முக்கோணம் குறித்து பல ஆச்சரியமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
இந்த இடத்தின் மீது பறக்கும் விமானங்களும், கடலில் செல்லும் கப்பல்களும் மர்மமாக காணாமல் போய்விடுமா? உலக மக்கள் அச்சத்துடன் பார்க்கும் அந்த இடம்தான் பெர்முடா முக்கோணம்.
பெர்முடா முக்கோணம் எங்கே உள்ளது?
பெர்முடா முக்கோணம் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா, பிரிட்டிஷ் தீவான பெர்முடா, மற்றும் கரிபியன் தீவான பியூர்ட்டோ ரிகோ — இந்த மூன்று இடங்களையும் இணைத்தால் கடலில் ஒரு முக்கோண வடிவம் உருவாகும். அந்தப் பகுதிதான் பெர்முடா முக்கோணம்.
மேல் பகுதியில் பெர்முடா, இடப்புறத்தில் ஃப்ளோரிடா, கீழ்ப்புறத்தில் பியூர்ட்டோ ரிகோ. இந்த முக்கோண வடிவத்துக்குள் உள்ள கடல் பகுதியை “டெவில்ஸ் ட்ரையாங்கிள்” (பிசாசின் முக்கோணம்) என்றும் அழைக்கிறார்கள்.
முக்கியமாக, இது அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் குறிக்கப்பட்ட இடம் அல்ல. ஒரு மாநிலம் போல தெளிவான எல்லைகள் இதற்கு இல்லை. இருந்தாலும், பூமியில் உள்ள மிகப்பெரிய மர்மமான பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
மர்மத்தின் முதல் உண்மை :
இந்த பகுதியில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 20 விமானங்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பகுதிக்குள் நுழைந்தவுடன் எந்தவித சிக்னலும் கிடைக்காமல் போகும். சடலங்களோ, உடைந்த கப்பல் அல்லது விமானப் பாகங்களோ கூட கிடைக்கவில்லை.
கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதியில் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனால்தான் பெர்முடா முக்கோணம் உலகின் மிகப் பெரிய கடல் மர்மமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு பல அமானுஷ்ய காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. வேற்றுகிரகவாசிகள், கடலில் வாழும் கொடூரமான உயிரினங்கள், அல்லது ஹாலிவுட் படங்களில் வருவது போல காலத் துளை (Time Hole) இருப்பதாகவும் சிலர் நம்புகின்றனர்.
அதாவது, பெர்முடா முக்கோணம் ஒரு குழி போல இருந்து, அதில் விழும் பொருட்கள் கடந்த காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ சென்றுவிடும் அல்லது முழுமையாக மறைந்து விடும் என்பதுபோன்ற கற்பனைகள் பரவலாக உள்ளன. ஆனால் இவை அனைத்திற்கும் அறிவியல் ஆதாரம் இல்லை.
இரண்டாவது உண்மை
அதே நேரத்தில், தினமும் பல விமானங்கள் இந்தப் பகுதியின் மீது பாதுகாப்பாக பறந்து செல்கின்றன. சரக்கு கப்பல்கள், சொகுசுக் கப்பல்கள், மீன்பிடி படகுகள் என அனைத்தும் வழக்கம்போல இந்தப் பகுதியில் பயணம் செய்கின்றன.
இந்த இடம் உண்மையில் ஆபத்தானதாக இருந்தால், விமான நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாதையை தடை செய்திருக்கும்.
ஆனால், இங்கு ஒரு விசித்திரம் உள்ளது. சில இடங்களில் திசைகாட்டி (Compass) சரியாக வடக்கு திசையை காட்டாமல் தவறாக செயல்படுகிறது.
இதற்கு விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்னவென்றால், பூமியின் காந்தப்புலம் ஒரே மாதிரி இல்லாதது. அதனால் அந்தக் காலத்தில் ஜிபிஎஸ் வசதி இல்லாத மாலுமிகள் தவறான திசையில் பயணம் செய்து விபத்தில் சிக்கியிருக்கலாம்.
மேலும், கடலின் அடியில் உள்ள சில பாறைகள், சூரிய கதிர்வீச்சு போன்றவை கூட காந்தப்புலத்தை பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல் இப்போது உண்மையான ஆச்சரியம் இதுதான்.
பெர்முடா தீவின் கீழே, விஞ்ஞானிகள் 20 கிலோமீட்டர் தடிமன் கொண்ட பிரம்மாண்டமான பாறை அடுக்கை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பாறை, பூமியின் மேலோடு (Crust) மற்றும் டெக்டானிக் தட்டுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
இந்த பாறை சாதாரண பாறைகளை விட மிகவும் லேசானது. இது போன்ற பாறைகள் பூமியின் வேறு எந்த பகுதியில் கூட இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த கண்டுபிடிப்பு நிலநடுக்க அதிர்வலைகளை ஆய்வு செய்தபோது வெளிச்சத்திற்கு வந்தது. பெர்முடா பகுதியில் அதிர்வலைகள் விசித்திரமாக குறைவதை விஞ்ஞானிகள் கவனித்தனர். அதற்குக் காரணம் அந்தப் பாறை அடுக்கே.
இந்த பாறையின் வரலாறு
இந்த பாறைகள் மிகப் பழமையான எரிமலைப் பாறைகள் என நம்பப்படுகிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாஞ்சியா எனும் ஒரே பெரும் கண்டம் உடைந்தபோது, அதன் எச்சமாக இந்த பாறை இங்கு மிச்சமாய் தங்கி இருக்கலாம்.
அதனால்தான் பெர்முடா தீவு, அதன் சுற்றியுள்ள கடல் தளத்தை விட 500 மீட்டர் உயரமாக காணப்படுகிறது.
இதன் முக்கியத்துவம் என்ன?
இந்த கண்டுபிடிப்பு, எரிமலை தீவுகள் எப்படி உருவாகின்றன என்பதைப் பற்றி விஞ்ஞானிகளை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளது. ஹவாய், ஐஸ்லாந்து போன்ற தீவுகள் உருவான விதத்தை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள இது உதவும்.
இந்த பாறைக்கும், காணாமல் போன விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கும் தொடர்பு உள்ளதா?
இல்லை என்று விஞ்ஞானிகள் தெளிவாக கூறுகின்றனர். ஏனெனில், இந்த பாறைகள் பூமியின் ஆழத்தில் இருப்பதால், மேற்பரப்பில் உள்ள விமானங்கள் அல்லது கப்பல்களை பாதிக்க வாய்ப்பில்லை.
ஆனால், இந்த ஆய்வுகள் தொடர்ந்தால், பூமியைப் பற்றிய இன்னும் பல ஆச்சரியமான உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரக்கூடும்.








