இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா தொடருக்கு பிறகு இந்த இரண்டு வீரர்களுடனும் பிசிசிஐ விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், இருவரும் சேர்ந்து டி20 வடிவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதன் பின்னர், 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் இந்த இரண்டு வீரர்களும் விளையாடுவார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வந்தது.
இந்த தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
வருங்காலத் திட்டங்கள், குறிப்பாக 2027 உலகக் கோப்பை வரை அவர்களின் ஃபார்ம் எப்படி இருக்கும், அந்த காலம் வரை தொடர்ந்து விளையாடுவதற்கான திறன் உள்ளதா போன்ற கேள்விகளை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ அதிகாரிகள் முன்வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப காலங்களில் இரு வீரர்களின் ஆட்டம் சற்றுக் குறைவாகக் காணப்பட்டாலும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் அவர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இருப்பினும் தொடர்ந்து நிலையான ஆட்டம் இல்லாத சூழலில் இந்த ஆலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறக்கூடும் எனவும், 2027 உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் இருவரும் பங்கேற்பார்களா என்பதற்கான தெளிவு அந்த கூட்டத்திலே கிடைக்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.








