கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் வசந்தகுமார் எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார். அவருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்கு சென்றதை அறிந்த வசந்தகுமார், அவள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இரத்தம் சொட்டச் சொட்ட சிறுமி அலறியபடி பக்கத்து வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் என்ன நடந்தது என்று கேட்டபோது, “வீட்டில் இருக்கும் என் காதலனை காப்பாற்றுங்கள்” என்று சிறுமி கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தைக் குறித்து அரவக்குறிச்சி காவல்நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அக்கம்பக்கத்தினர் சிறுமியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வசந்தகுமார் வீட்டில் உள்ள கம்பியில் துணியால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்விற்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தற்போது உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வருகிறார். என்ன நடந்தது என்பதை சிறுமியிடம் போலீசார் விசாரித்தபோது, கடந்த மூன்று ஆண்டுகளாக வசந்தகுமானருடன் காதலில் இருந்ததாகவும், அண்மையில் இந்த விஷயம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததாகவும், ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சிறுமி கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் இருவரும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த வசந்தகுமார் முதலில் பிளேடால் சிறுமியின் கழுத்தை அறுத்ததாகவும், அதில் சிறுமி மயங்கியதாகவும் கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் சிறுமிக்கு மயக்கம் தீர்ந்தபோது, வசந்தகுமார் துணியால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருப்பதை பார்த்துள்ளார். இதனால் சிறுமி அலறியபடி பக்கத்து வீட்டிற்கு சென்று உதவி கேட்டுள்ளார்.
ஆனால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்க்கும் நேரத்தில் வசந்தகுமார் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார். சிறுமி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில், பிளஸ்-2 மாணவியின் வீட்டில் காதலன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








