ரயில்கள் கடக்கும்போது அவற்றின் பெட்டிகளை எண்ணி எண்ணி நமக்கு கழுத்து வலிக்குமல்லவா? ரயில்கள் பல கிலோமீட்டர் நீளத்தை கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? உலகின் நீளமான ரயில்கள் மற்றும் இந்தியாவின் நீளமான ரயில்கள்.
ரயில்கள் என்றாலே அவற்றின் நீளமே ஒரு விசேஷம். ஆஸ்திரேலியாவின் BHP Iron Ore ரயில்தான் உலக வரலாற்றிலேயே நீளமான ரயில். இது 7.353 கிலோமீட்டர் நீளம் கொண்டது. அதிக நீளமும் அதிக எடையும் கொண்ட ரயிலாகும் என்ற கின்னஸ் சாதனையையும் இந்த ரயில் பெற்றுள்ளது.
682 பெட்டிகளும் எட்டு இன்ஜின்களும் கொண்ட இந்த ரயிலின் எடை சுமார் 1 லட்சம் டன். இது 82,000 மெட்ரிக் டன் இரும்புத் தாது சுமந்து சென்றது.
இரண்டாம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் சிஷன்–சால்டன்ஹா இடையில் ஓடிய ரயில் உள்ளது. இது 1989ல் முதல் முறையாக ஓடியது. 660 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலின் நீளம் 7.3 கிலோமீட்டர். இதன் எடை 71,765 டன். இது 16 இன்ஜின்களை கொண்டிருந்தது.
இந்தியாவின் ருத்ராஷ்டிரா சரக்கு ரயில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் 354 பெட்டிகளையும் எட்டு இன்ஜின்களையும் கொண்டுள்ளது. இந்த ரயில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் தனது சோதனை ஓட்டத்தை முடித்தது.
சுமார் 25,500 டன் சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில் ஆசியாவிலேயே நீளமான ரயில் என்ற பெருமையை பெற்றுள்ளது.








