Home விளையாட்டு “2026 IPL மினி ஏலம்: 350 வீரர்களில் யார் டாப் பிட்டிங்?”

“2026 IPL மினி ஏலம்: 350 வீரர்களில் யார் டாப் பிட்டிங்?”

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலம் வரும் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் அணிகளின் கையிருப்பு தொகையைப் பார்க்கலாம்.

2026 ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க 1390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில், அவை சம்பந்தமான அணி நிர்வாகங்களுடன் ஆலோசித்து, 350 வீரர்களை மட்டும் தேர்வு செய்து BCCI இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 10 அணிகளில் காலியாக உள்ள 77 இடங்களுக்காக மினி ஏலம் நடைபெற உள்ளது. அணிகளின் மொத்த ஏலத்தொகை 237 கோடியே 55 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகப்படியான கையிருப்பு கொண்டது முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – 64 கோடியே 30 லட்சம் ரூபாய். இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் – 43 கோடியே 40 லட்சம் ரூபாய், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 25 கோடியே 50 லட்சம் ரூபாய் கையிருப்பு வைத்துள்ளன.

மினி ஏலத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியலில்:

  • சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய 16 வீரர்கள்
  • சர்வதேச போட்டிகளில் விளையாடிய 96 வெளிநாட்டு வீரர்கள்
  • உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடிய 224 இந்திய வீரர்கள்
  • உள்ளூர் மட்டத்தில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காலியாக உள்ள 77 இடங்களில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஏலத்தில் அதிக விலையில் செல்லக்கூடியவர் என எதிர்பார்க்கப்படுவது ஆஸ்திரேலிய ஆல்-ரௌண்டர் கேமரூன் கிரீன். ரசல், மேக்ஸ்வெல், டூப்ளசி ஆகியோர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், கிரீன், ஸ்டீவ் ஸ்மித், ஜாமி ஸ்மித், டெவான் கான்வே, டேவிட் மில்லர், மேக்கார்க், பதீராணா, வெங்கடேஷ் அய்யர், பிஷ்னாய், லிவிங்ஸ்டன் போன்ற வீரர்கள் உயர்ந்த விலையில் செல்ல வாய்ப்பு உள்ளது.

ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்று மீண்டும் விளையாட வரும் தென்னாப்பிரிக்க வீரர் குவின்டன் டி காக் ஏலப் பட்டியலில் இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

பட்டியலில் ஒன்றிலிருந்து 70 வரை இடம் பெற்ற வீரர்கள் வரிசைப்படி ஏலத்தில் விடப்படுவார்கள். இது ‘ஆக்சலரேட்டர்’ முறை ஏலம் என்பதால், அணிகளுக்கு தேவையான வீரர்களின் பட்டியலை முன்கூட்டியே தயாரிக்க ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.