இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு ஆராய்ச்சியின் மூலம் ₹2,64,156 கோடி அளவுக்குப் பிரம்மாண்டமான தொகையைச் சேமித்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஏவுகணை மேம்பாடுகளில் DRDO முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது என்றும் பாராளுமன்ற நிலைக்குழு பாராட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதிநவீன தொழில்நுட்ப சாதனைகள்
நாட்டின் சிக்கலான மற்றும் முக்கியமான பாதுகாப்புத் தொழில்நுட்பத் திறனை DRDO மேம்படுத்தி வருவதாகக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. சமீபத்தில் எட்டப்பட்ட முக்கிய தொழில்நுட்பச் சாதனைகள் குறித்து அரசாங்கம் குழுவுக்குத் தகவல் அளித்துள்ளது:
- ஹைப்பர்சோனிக் ஏவுகணை: 2024 நவம்பரில், நீண்ட தூரம் பாயும் முதல் ஹைப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை (Hypersonic Anti-Ship Missile) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
- MIRV தொழில்நுட்பம்: 2024 மார்ச் மாதம், ‘அக்னி’ பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி, பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பமான Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV)-ஐ DRDO வெற்றிகரமாகச் சோதித்தது. இந்த முக்கியமான அமைப்பு, ஒரே ஏவுகணை மூலம் பல அணுகுண்டுகளைப் பல இலக்குகளில் ஏவ அனுமதிக்கும் திறன் கொண்டது.
- வான் பாதுகாப்பு அமைப்புகள்: மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (Very Short Range Air Defence System) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.
- டாங்கி எதிர்ப்பு ஏவுகணை: இந்திய இராணுவத்திற்கான ‘மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய டாங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணையின்’ (Man-Portable Anti-Tank Guided Missile) தற்காலிக தரத் தேவைகளுக்கான (Provisional Staff Qualitative Requirements) சரிபார்ப்பு சோதனைகளும் நிறைவடைந்துள்ளன.
ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் மற்றும் ஏற்றுமதி இலக்குகள்
பாதுகாப்பு நிலைக்குழுவின் மற்றொரு அறிக்கையில், ‘ஸ்பரிஷ்’ (SPARSH) என்ற ஓய்வூதிய நிர்வாக அமைப்பின் (System for Pension Administration (Raksha)) முன்னேற்றங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்கும் முறையை முறைப்படுத்துவதற்காக, 28.24 லட்சம் பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர்கள் ஏற்கனவே ஸ்பரிஷ் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த முன்னேற்றத்தைப் பாராட்டிய குழு, மீதமுள்ள ஓய்வூதியதாரர்களின் மாற்றத்தையும் விரைவுபடுத்தப் பரிந்துரைத்தது.
மேலும், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியை உயர்த்துவதற்காக, புதிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் உலகத் தேவைகளுக்கு ஏற்ப முக்கிய இலக்கு நாடுகள் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய தயாரிப்புகளை அடையாளம் கண்டுள்ளன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.








