Home தமிழகம் ஐஐடி ஆய்வில் வெளிச்சம் பார்த்த நெல்லையின் அதிசய கிணறு!

ஐஐடி ஆய்வில் வெளிச்சம் பார்த்த நெல்லையின் அதிசய கிணறு!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது அந்த அதிசய கிணறு. வெள்ளைக்காலங்களில் மிகப் பெரிய அளவில் தண்ணீரை உள்வாங்கும் தன்மை இதற்கு உண்டு.

அப்போது அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்கிறது. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் கூட, ஒரு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் தொடர்ந்து சென்றது.

பல நாட்கள் தண்ணீர் சென்றும் கிணறு ஒருபோதும் நிரம்பவில்லை. இதனால்தான் இதற்கு “அதிசய கிணறு” என்ற பெயர் வந்தது.

இந்த விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சென்னை ஐஐடி பேராசிரியர்களை அழைத்து ஆய்வு செய்யச் சொன்னது.

மூன்று மாதங்கள் ட்ரோன் கேமரா, கோப்ரா கேமரா, ஜிபிஎஸ் உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தி, இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிணறுகளை ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், இந்த இடம் முழுவதும் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக உள்ளன. மழைநீரில் இருக்கும் ஆக்சிஜன் அந்தப் பாறைகளுடன் வினைபுரியும் போது, அதில் பல துவாரங்கள் உருவாகின்றன.

காலப்போக்கில் அந்தத் துவாரங்கள் பூமிக்குள் பெரிய குகைகளாக மாறுகின்றன. அதனால் சில கிணறுகளின் கீழே, நேராக பூமிக்குள் கால்வாய் போன்ற அமைப்புகள் இருப்பது தெரிய வந்தது.

இந்த கால்வாய்களில் தண்ணீர் தொடர்ந்து செல்லச் செல்ல, அவை இன்னும் பெரிய பாதைகளாக மாறி, தண்ணீரை வேகமாக இழுத்துச் செல்கின்றன.

இதன் காரணமாக, ஒரு கிணறு சராசரியாக 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், அதிசய கிணறு முற்றிலும் காய்ந்து போய்விட்டது.

தற்போது டிட்வா புயல் காரணமாக நல்ல மழை பெய்ததுடன், கருமேனியாறு கால்வாயிலிருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டதால், கிணறு மீண்டும் உயிர்பெற்றது போல, 100 கன அடி தண்ணீரை உள்வாங்கி வருகிறது.

உபரி நீர் அனைத்தும் கிணற்றுக்குள் செல்லச் செய்வதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள், குறிப்பாக விவசாயிகள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.