பிரபஞ்சத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வெடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் கடந்த ஜூலை மாதம், நாசாவின் ஃபெர்மி காமா கதிர் தொலைநோக்கி இதுவரை யாரும் கண்டிராத ஒரு பிரம்மாண்டமான வெடிப்பை பதிவு செய்துள்ளது.
அந்த வெடிப்பு சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ அல்ல; கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் நீடித்துள்ளது. இது விண்வெளி வரலாற்றிலேயே இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் மிக நீண்ட காலம் நீடித்த காமா கதிர் வெடிப்பாக கருதப்படுகிறது.
வழக்கமாக காமா கதிர் வெடிப்புகள் சில மில்லி விநாடிகளிலிருந்து சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். ஆனால் GRB 250702B என்று பெயரிடப்பட்ட இந்த வெடிப்பு, ஏழு மணி நேரம் நீடித்ததோடு, இடைவிடாமல் மீண்டும் மீண்டும் வெடித்து சிதறியுள்ளது.
இந்த வினோதமான நிகழ்வு விஞ்ஞானிகளை பெரும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. இந்த மெகா வெடிப்புக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய அவர்கள் ஆராய்ந்தபோது, இரண்டு சுவாரசியமானதும் அதே நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது கோட்பாடு, இது நடுநிலை எடை கொண்ட கருந்துளையின் செயல்பாடாக இருக்கலாம் என்பதாகும். அதாவது, நமது சூரியனை விட நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மடங்கு பெரிய ஒரு கருந்துளை, அதன் அருகே வந்த ஒரு நட்சத்திரத்தை ஈவு இரக்கம் இன்றி கிழித்தெறிந்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது உண்மையாக இருந்தால், ஒரு நடுநிலை கருந்துளை இவ்வளவு பெரிய காமா கதிர் ஜெட்டை உருவாக்குவது இதுவே முதன்முறை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது கோட்பாட்டின்படி, ஒரு சிறிய கருந்துளை, ஒரு ஹீலியம் நட்சத்திரத்தைச் சுற்றி வந்து, அதை உள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சியதன் விளைவாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் சில ஆதாரங்கள் இருந்தாலும், எது உண்மையான காரணம் என்பதற்கான தெளிவான பதில் இன்னும் மர்மமாகவே உள்ளது.
இந்த ஏழு மணி நேரம் நீடித்த பிரபஞ்ச வெடிப்பு, இதுவரை நமது பிரபஞ்சத்தைப் பற்றி வைத்திருந்த பல கணிப்புகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த மர்மமான வெடிப்பின் உண்மையான காரணத்தை கண்டறிவது, பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் ஆழ்ந்த ரகசியங்களைப் பற்றிய நமது புரிதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.








