Home திரையுலகம் “ஆஸ்கர் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் – இலவச நேரலை!”

“ஆஸ்கர் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் – இலவச நேரலை!”

திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் ஒளிபரப்பு உரிமையில், வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 1961ஆம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகளை உலகிற்கு தடையின்றி ஒளிபரப்பி வந்த அமெரிக்காவின் ஏபிசி (ABC) தொலைக்காட்சி நிறுவனத்தின் நீண்டகால பயணம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

இதற்கான உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை பிரபல இணைய தளமான YouTube அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது.

இந்த மாற்றத்தின்படி, 2029ஆம் ஆண்டு முதல் 2033ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு, ஆஸ்கர் விருதுகள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான YouTube தளத்தில் மட்டுமே நேரலையாக ஒளிபரப்பப்படும்.

இதற்காக YouTube சார்பில் ஒரு பிரத்தியேக டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள், எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை முழுமையாக இலவசமாக காணும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த மாற்றம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது. குறிப்பாக நேரலையின் போதே பல்வேறு மொழிகளில் ஆடியோ மாற்றம் மற்றும் உடனடி மொழிபெயர்ப்பு வசனங்களை தேர்வு செய்து பார்க்கும் வசதியை YouTube வழங்க உள்ளது.

முதன்மை விருது விழா மட்டுமின்றி, திரையுலக நட்சத்திரங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு, ஆளுநர் விருதுகள், பரிந்துரை அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக, தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதும், டிஜிட்டல் தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியும் குறிப்பிடப்படுகின்றன.

இது குறித்து அகாடமியின் தலைமை நிர்வாகி வில் கிராமர் கூறுகையில், YouTube உடனான இந்த உலகளாவிய கூட்டணி ஆஸ்கர் விருதுகளுக்கு புதிய பரிணாமத்தை அளிப்பதோடு, புவியியல் எல்லைகளை கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடைய உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய ஒப்பந்தத்தின் படி 2028ஆம் ஆண்டு வரை ஏபிசி தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை தொடரும். குறிப்பாக, ஆஸ்கர் விருதுகளின் 100வது ஆண்டு விழா 2028ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வரலாற்று நிகழ்வே ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இறுதி ஆஸ்கர் விழாவாக இருக்கும்.

இதற்கு முன்னதாக, 98வது அகாடமி விருது விழா வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது.

இந்த மாற்றம், பொழுதுபோக்கு துறையில் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் மங்கிவந்து, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்கள் புதிய சகாப்தத்தை உருவாக்கி வருகின்றன என்பதற்கான முக்கிய சான்றாக கருதப்படுகிறது.