இமயமலைப் பகுதி நிலநடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக இருப்பதாக மத்திய புவியியல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இமயமலைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7-ஐ விட அதிக சக்தி கொண்ட நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய புவியியல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளது. சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கண்டத்தட்டு யூரேசிய கண்டத்தட்டுடன் மோதியதன் விளைவாக இமயமலை உருவானது.
தற்போது இந்த கண்டத்தட்டுகள், 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிக வேகத்துடன் நகர்வதால் அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஹிமாச்சலப் பிரதேசம் முதல் நேபாளம் வரை உள்ள சுமார் 800 கிலோமீட்டர் நீளப் பகுதியில், இமயமலை ஆண்டுக்கு 5 முதல் 8 மில்லிமீட்டர் வரை உயர்ந்து வருகிறது. இது 1505-ஆம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்க காலத்தை ஒத்த அளவிலான அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக 2033 முதல் 2036 வரையிலான காலப்பகுதியில் 8.8 ரிக்டர் அளவுக்கு வரை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய மற்றும் அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை வசிக்கும் சுமார் 5 கோடி மக்கள் பாதிக்கப்படக்கூடும். எனவே இந்தப் பகுதி ‘மண்டலம் 6’, அதாவது அதிதீவிர நிலநடுக்க மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் மட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுவதன் மூலம் ஒட்டுமொத்த தெற்காசியாவின் காலநிலையே மாற்றமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.








