மத்திய பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்கள் எச்ஐவி தொற்று உள்ள இரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில், இரத்த வங்கி மருத்துவர் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி இரத்தமாற்றம் செய்ய வேண்டிய நிலையில், பிளட் பேங்கில் இருந்து பெறப்பட்ட இரத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இரத்தமாற்றத்திற்குப் பிறகு, குழந்தைகளில் நான்கு பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நான்கு மாதங்களுக்கு முன்பே நடந்திருந்தாலும், தகவல் சமீபத்தில் வெளியானதால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதன் அடிப்படையில் தற்போது நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமாக, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் எச்ஐவி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட இரத்தத்தில்தான் தவறு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தை தாண்டி, நாடு முழுவதும் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் ஐந்து முதல் எட்டு வயதுக்குள் உள்ள சிறு குழந்தைகள் இத்தகைய கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மனிதநேய ரீதியாக மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தவறுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.








