தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அசோக். 45 வயதான இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மேனேஜராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி பூர்ணிமா 36 வயதானவர். இவர் வீட்டிலேயே பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு 12 வயதான ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று அசோக் வேலையிலிருந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்துள்ளார். உடல்நிலை சரியில்லை என்பதால் ஓய்வெடுக்கப் போவதாக பூர்ணிமாவிடம் கூறியுள்ளார்.
வேலை விஷயமாக வெளியே சென்ற பூர்ணிமா, சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அசோக் குளியறையில் பேச்சும் மூச்சும் இல்லாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அசோக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், அசோக் நெஞ்சுவலி இருப்பதாக கூறிவிட்டு ஓய்வெடுத்ததாகவும், வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்தபோது அவர் மயங்கி கிடந்ததாகவும் பூர்ணிமா வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் போலீசாருக்கு பூர்ணிமாவின் வாக்குமூலத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், சடலத்தில் இருந்த காயங்கள். அசோக் மரணத்தில் மர்மம் இருப்பதை உணர்ந்த போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, பூர்ணிமாவின் வீட்டிற்கு அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய தொடங்கியுள்ளனர்.
அப்போது, இரண்டு ஆண்கள் பூர்ணிமாவின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளையும், அசோக்கின் சடலத்தில் இருந்த காயங்களையும் ஒன்றிணைத்த போலீசார், மீண்டும் பூர்ணிமாவிடம் கிடுக்குப்பிடி விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அதில்தான், காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு, பூர்ணிமா மாரடைப்பு என நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, பிரகாசம் மாவட்டத்தில் வசித்தபோது, பூர்ணிமாவுக்கு கட்டிட வேலை செய்து வந்த மகேஷ் என்ற 22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியது. இதை தெரிந்து கொண்ட அசோக், மனைவியை கண்டித்துள்ளார். அதன் பிறகுதான் அவர்கள் வீட்டை காலி செய்து, மெடிப்பள்ளி பகுதியில் குடியேறியுள்ளனர்.
ஊர் விட்டு ஊர் வந்தாலும் கூட, பூர்ணிமாவின் மனதில் இருந்த காதல் அழியவில்லை. தொடர்ந்து மகேஷுடன் அவர் பேசி வந்துள்ளார். இந்த விஷயம் மீண்டும் அசோக்கிற்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் கடுமையாக பூர்ணிமாவை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமா, கணவனை தீர்த்துக்கட்டிவிட்டு, தனது காதலனுடன் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று, பூர்ணிமா அசோக்கை வேலையிலிருந்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அதேபோல், மகேஷையும் அவரது நண்பரையும் வீட்டிற்கு வரச் சொல்லியுள்ளார். மூவரும் சேர்ந்து அசோக்கை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர், மாரடைப்பு ஏற்பட்டது போல சித்தரித்து, கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்துள்ளார் பூர்ணிமா.
அசோக்கின் கழுத்தில் இருந்த காயங்களும், மகேஷ் மற்றும் அவரது நண்பர் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளும், பூர்ணிமாவின் மாரடைப்பு நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளன. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.








