சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் குறித்து வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை திடீரென கடுமையான பனிமூட்டம் நிலவியது.
சாலைகள் கண்களுக்கே புலப்படாத அளவிற்கு கடும் பனிமூட்டம் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
அதுமட்டுமல்லாமல், விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் கடும் காலதாமதம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த திடீர் பனிமூட்டம் (மூடுபனி) ஏற்படுவதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, பார்வைத் திறன் 150 மீட்டர் வரை குறைந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் மூடுபனி குறித்து பல்வேறு விளக்கங்களை வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.
இன்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் மிதமானது முதல் அடர்ந்த மூடுபனி காணப்பட்டதாகவும், காலை 5:30 மணியளவில் பார்வைத் திறன் சுமார் 1500 மீட்டராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மூடுபனி அதிகரித்ததால், காலை 6:30 மணிக்குள் அது 315 மீட்டராக குறைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில், அதாவது 7:30 மணியளவில் மேலும் சரிந்து 150 மீட்டராக குறைந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
அதிகாலை நேர மூடுபனி பார்வைத் திறனை குறைத்ததுடன், குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் பயணத்தை கடுமையாக பாதித்ததாக தெரிவித்துள்ளது.
அதிக ஈரப்பதம், லேசானது முதல் அமைதியான காற்று, மற்றும் குறைந்த இரவு நேர வெப்பநிலை ஆகியவற்றின் கலவையால் இந்த மூடுபனி திடீரென உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
பிப்ரவரி மாதம் இறுதிவரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஆங்காங்கே அதிகாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மூடுபனி நிலவ வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.








