தென் மாநிலங்களிலான எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்த சங்கம், நாமக்கலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகள் இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுடன் 2018 முதல் 2023 வரை ஒப்பந்தம் செய்து டேங்கர் லாரிகள் இயங்கின.
இந்நிலையில், 2025 முதல் 2030 வரையிலான புதிய ஒப்பந்தத்திற்காக எண்ணெய் நிறுவனங்கள் புதிய டெண்டரை ஏப்ரல் 15ஆம் தேதி வரை அறிவித்திருந்தன. இந்த புதிய டெண்டரில் 5,514 லாரிகளுக்கு பதிலாக 3,478 லாரிகளுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சுந்தரராஜ் தலைமையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கலந்து கொண்டு பேசும் போது, “புதிய டெண்டரில் பங்கேற்ற அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; இல்லையெனில் கடுமையான பாதிப்பு ஏற்படும்,” என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று முதல் தென் மாநிலம் முழுவதும் சுமார் 5,000 எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தத்தால் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.பண்டிகை காலத்தை ஒட்டியே இந்த வேலைநிறுத்தம் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.








