Home வணிகம் “நினைவுகளை விற்கும் வணிகம்: பழைய பிராண்டுகளின் புதிய யுகம்”

“நினைவுகளை விற்கும் வணிகம்: பழைய பிராண்டுகளின் புதிய யுகம்”

புகழ்பெற்ற பழைய பிராண்டுகள் மீண்டும் சந்தையில் களமிறங்கும் போக்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்றிருந்த வெல்வெட் ஷாம்பூ பிராண்டை ரிலயன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தி, அதே பெயரில் ஷாம்பூ, சோப், பாடி லோஷன், பவுடர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.

ஏழை எளிய மக்களும் வாங்கும் வகையில் சாஷேகளில் பொருட்களை அறிமுகப்படுத்தி, இந்திய வணிக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் தமிழகத்திலிருந்து உருவான வெல்வெட் ஷாம்பூ ஆகும். இதேபோல், 1970களில் அறிமுகமான கேம்பா குளிர்பானத்தையும் ரிலயன்ஸ் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

உணவுப் பொருட்கள் வணிகத்தில் நாடெங்கும் பிரபலமான சில் பிராண்டை வாங்கி, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் துறையில் ரிலயன்ஸ் நுழைந்துள்ளது. இதன் மூலம் சில் என்ற பெயரில் ஜாம், நூடுல்ஸ், சாஸ் உள்ளிட்ட பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.

பழைய பிராண்டுகளை உயிர்ப்பிப்பதில் ஆர்வம் காட்டும் ரிலயன்ஸ், கல்வினேட்டர், பீபில் போன்ற பழைய பிராண்டுகளையும் மீண்டும் கொண்டு வந்துள்ளது. பிற பிரபல நிறுவனங்களும் இதே போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. கைனடிக்ஸ் ஸ்கூட்டர்களும் மீண்டும் சந்தையில் வலம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாக ஒரு பிராண்ட் பெயரை மக்கள் மனதில் பதிய வைப்பதை விட, ஏற்கனவே பிரபலமான பழைய பிராண்டுகளை மீண்டும் சந்தையில் விற்பனை செய்வது எளிது என மார்க்கெட்டிங் வித்தகர்கள் கூறுகின்றனர். மேலும், ஒருவித உணர்ச்சி பிணைப்பும் இவ்வகை விற்பனையை ஊக்குவிக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தைகளில் விற்கும் பொருட்கள் மட்டுமல்லாமல், முத்திரை பதித்த பழைய திரைப்படங்களின் பெயர்களிலும் தற்போது புதிய படங்கள் உருவாகின்றன. “ஓல்டிஸ் கோல்ட்” என்பது இதுதானோ!