பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் சென்னை காவல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜாய் கிரிசில்டா என்ற பெண், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், “மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, தன்னுடைய கர்ப்பத்திற்கு பொறுப்பேற்காமல் தப்பித்தார்” என புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு (WCCB)க்கு மாற்றப்பட்டது. விசாரணை நடைபெறும் போது இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாமாநில மகளிர் ஆணையத்திலும், புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் இரு முறை விசாரணை நடத்தப்பட்டு, மூன்றாவது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை இறுதி தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவிதமான பதிலும் அளிக்காத நிலையில், மகளிர் ஆணையத் தலைவர் குமரி அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை காவல் துறைக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிக்கும் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை காவல் துறையினர் வழக்கறிஞருடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.








