கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகா – தாயின் இழப்புக்குப் பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் திரையுலகில் 1989 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான “கரகாட்டக்காரன்” மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கனகா.
அவர், தமிழ் திரையுலகில் ஜாம்பவான்களாக வலம் வந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டவர்களுடன் கதாநாயகியாக நடித்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.
தமிழில் தங்கமான ராசா, பெரிய இடத்து பிள்ளை, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, பெரிய வீட்டு பண்ணக்காரன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அதிசய பிறவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்த கனகா, 1990களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
1991 ஆம் ஆண்டு, சித்திக்-லால் இயக்கத்தில் வெளிவந்த “காட்பாதர்” (Godfather) திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அந்த படம் 400 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, மலையாள திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.
அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த கனகாவின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது, 2002 ஆம் ஆண்டு தாயார் தேவிகா மறைவு கனகாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
சிங்கிள் பேரண்ட் குழந்தையாக தாயின் அரவணைப்பில் வளர்ந்த கனகாவிற்கு, தாயின் இழப்பு மிகுந்த மனரீதியான பின்னடைவை ஏற்படுத்தியது. இரண்டு வாரங்களிலேயே முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை, தாயின் மறைவுக்குப் பிறகு தந்தையின் நம்பிக்கை மோசடி, உடல்நலப் பிரச்சினைகள் போன்ற பல சவால்கள் தொடர்ச்சியாக வந்து சேர்ந்தன. இதன் விளைவாக, கனகா வெளியுலகத்திலிருந்து தன்னைப் பிரித்து வாழத் தொடங்கினார்.
திரையுலகில் “கரகாட்டக்காரன் நடிகை கனகா எங்கே?” என்ற கேள்வி அவ்வப்போது எழுந்தபோது, அவரைச் சுற்றிய வதந்திகள் பல முறை ஊடகங்களில் வெளிவந்தன.
அந்த வகையில், 2023 நவம்பர் மாதத்தில் நடிகை குட்டி பத்மினி தனது எக்ஸ் (X) தளத்தில் நடிகை கனகாவுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில், அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்த கனகாவைப் பார்த்த ரசிகர்கள் “அட, நம்ம கனகாவா இது?” என்று அதிர்ச்சி அடைந்தனர்.
அது ரசிகர்களை பெரிதும் வருத்தமடையச் செய்தது. இந்நிலையில், தற்போது நடிகை ராமராஜன், நடிகை கனகாவைச் சந்தித்ததைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
அதில் அவர்,
“தாயாரின் மறைவுக்குப் பிறகு கனகா மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்.பழைய நினைவுகளையும் அவர் மறந்துவிட்டார்,” என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில், “மீண்டும் வாருங்கள் கனகா… எங்களுடன் நீங்க இருக்கீங்க!”
என உற்சாகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.








