புதுக்கோட்டை மாவட்டம் குசலாக்குடி வீரமுத்து நகரைச் சேர்ந்தவர் மகமாயி, மகா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு கிராமிய பாடகி. கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடுவதும், கச்சேரி நடத்துவதும் இவரது வழக்கம். மேலும் சமூக வலைதளங்களில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி பதிவிட்டு வந்தார்.
இவரின் பாடல்களுக்கு இணையத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மகா குசலாக்குடி பகுதியில் வசித்து வந்தார். அவரது எதிர் வீட்டில் காயத்ரி என்ற பெண் வாடகைக்கு குடியேறியிருந்தார். மகாவுக்கு சொந்த உறவினர் எவரும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆதரவற்ற நிலையில் இருந்த மகாவுக்கு, காயத்ரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அன்பும் அரவணைப்பும் தேடிய மகாவுக்கு, காயத்ரியின் நட்பு பெரும் ஆறுதலாக இருந்தது. இதனால் இருவரும் நெருக்கமாக பழகினர். மகா, காயத்ரியை தாய் போல் நினைத்து வந்ததாக கூறப்படுகிறது.
காயத்ரியின் கணவர் கார்த்திக் பாண்டியன் சவுண்ட் சிஸ்டம் அமைக்கும் தொழிலில் இருந்தார். மகாவின் கச்சேரிகளுக்கும் அவர் சவுண்ட் சர்வீஸ் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. மகா, கார்த்திக் பாண்டியனையும் காயத்ரியையும் தனது குடும்பமாகவே கருதி வந்தார். மேலும் மகாவின் YouTube சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை கார்த்திக் பாண்டியனே நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் கொண்ட மகாவின் YouTube மற்றும் இன்ஸ்டா கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக கார்த்திக் பாண்டியனும், காயத்ரியும் மகாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பல வருட உழைப்பால் உருவாக்கிய சேனல் ஹேக் செய்யப்பட்டதாக கேட்ட மகா அதிர்ச்சியடைந்தார்.
அதை மீட்டுத் தரலாம் என்று கூறிய கார்த்திக் பாண்டியன், போலீஸ் உதவி பெற பணம் தேவைப்படும் எனக் கூறி மகாவிடமிருந்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் “என் அண்ணன் ஒருவர் கிரைம் பிரிவில் வேலை செய்கிறார், அவரிடம் பேசிப் பார்த்து சரி செய்து விடலாம்” எனவும் கூறியதாக மகா தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய மகா, தனது நகைகளை அடகு வைத்து, அவர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், மொத்தம் சுமார் 80 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் காயத்ரி தம்பதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், கடன் கொடுத்தவர்களிடமிருந்து மகா கடுமையான அழுத்தம் சந்திக்க நேர்ந்தது. இதன் மூலம் தான் கார்த்திக் பாண்டியனும் காயத்ரியும் தன்னை ஏமாற்றி பணம் பறித்ததை மகா உணர்ந்ததாக தெரிவிக்கிறார்.
மகா கூறியதாவது: “அவர்கள் என்கிட்ட நகையும், பணமும் வாங்கி, அதைப் பயன்படுத்தி வீடு, வாகனம், ஆடியோ உபகரணங்கள், கேமரா, ட்ரோன் போன்ற பல சொத்துகளை வாங்கியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் வசதியாக வாழ்கின்றனர். ஆனால் நான் கடனாளர்களின் அழுத்தத்தால் துன்பப்படுகிறேன்,” என்றார்.
மகா, கார்த்திக் பாண்டியனும் காயத்ரியும் தன்னிடமிருந்து ஏமாற்றி வாங்கிய பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கார்த்திக் பாண்டியனிடம் விளக்கம் கேட்க முயன்றபோதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








