ஆந்திராவில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட முன்னாள் ஊழியர், தனது சொத்தின் 90% பகுதியை கோயிலுக்கு எழுதிவைப்பதாக அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலில், காணிக்கை பணத்தை எண்ணும் பிரிவில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் ரவிக்குமார். இவர்மீது சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு காணிக்கைத் தொகையை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தாம் செய்த தவறை முழுமையாக உணர்ந்ததாக ரவிக்குமார் கண்ணீருடன் விளக்கமளிக்கும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
உண்டியல் காணிக்கை பணத்தை திருடியது உண்மைதான்; செய்யக்கூடாத பிழை செய்துவிட்டேன் என்றும் அதற்கான வருத்தத்தில் தனது சொத்தின் 90% கோயிலுக்கு கொடையாக அளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தாம் சிலருக்கு பணம் கொடுத்ததாக வெளியான தகவல்கள் சரியானவை; ஆனால் “பணம் திருட அறுவை சிகிச்சை செய்தார்” எனப் பரவிய செய்தி தவறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நீதிமன்றம் எத்தகைய மருத்துவ பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டாலும், முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
தாம் செய்த பிழைக்காக மனம் வருந்தாத நாள் இல்லை எனவும், அது வாழ்க்கை முழுவதும் தன்னை வேதனைப்படுத்துகிறது என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார்.








