Home தமிழகம் “2026 புத்தாண்டு பரிசா பொங்கல் பணம்? எதிர்பார்ப்பில் மக்கள்”

“2026 புத்தாண்டு பரிசா பொங்கல் பணம்? எதிர்பார்ப்பில் மக்கள்”

தமிழ்நாட்டில் 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் அரிசி அட்டைதாரர்கள். இவர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளது.

பொங்கல் தொகுப்பு குறித்து அரசு அறிவிப்பு வெளியானவுடன், ஜனவரி முதல் வாரத்தில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பும் ரொக்கப் பணமும் விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் தொகுப்புடன் எவ்வளவு ரொக்கப் பணம் வழங்கலாம் என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொங்கல் தொகுப்பில் இடம் பெறும் பொருட்கள் என்னென்ன, ரொக்கப் பணமாக எவ்வளவு வழங்கலாம், இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு எவ்வளவு என்பவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு ₹2500 ரொக்கப் பணம் வழங்கியது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

ஆனால் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது; ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. இதனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு அதிமுக ஆட்சியை மிஞ்சும் வகையில் ₹3000 ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், பொங்கலுக்கு ₹5000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மகளிர் உரிமைத்தொகை ஏற்கனவே மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவதால், ₹5000 வழங்குவதற்கு வாய்ப்பு குறைவு என தெரிகிறது. அதே நேரத்தில், ₹3000 வழங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

2026ஆம் ஆண்டு புத்தாண்டு பரிசாக, இந்த பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.