Home இந்தியா “கடன் தவறினால் கைப்பேசி ‘ஆஃப்’ – கடுமையான கட்டுப்பாட்டுடன் புதிய ஆர்.பி.ஐ திட்டம்!”

“கடன் தவறினால் கைப்பேசி ‘ஆஃப்’ – கடுமையான கட்டுப்பாட்டுடன் புதிய ஆர்.பி.ஐ திட்டம்!”

செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வாங்குவதற்காக மக்கள் பெரும்பாலும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வருகின்றனர். ஆய்வுகளின் படி நாட்டில் விற்பனை செய்யப்படும் மொத்த மின்னணு சாதனங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பொருட்கள் வாடிக்கையாளர்களால் கடன் மூலம் வாங்கப்படுகின்றன.

குறிப்பாக 10,000-ல் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் அதிகமாக கடனில் வாங்கப்படுகின்றன ஆனால் கடனை திருப்பி செலுத்தாமல் தவிர்க்கிற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நிதி நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

இதனால் நிதி நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கான தீர்வாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய திட்டம் ஒன்றை ஆராய்ந்து வருகிறது.

அந்த திட்டத்தின்படி இனி செல்போன்களை கடனில் வாங்கும் வாடிக்கையாளர்களின் போன்களில் சிறப்பு செயலி ஒன்றை முன்பே நிறுவி இருப்பார்கள்.அந்த செயலியை ஒருபோதும் நீக்க முடியாது.

வாடிக்கையாளர்கள் கடனை சரியாக கட்டிக்கொண்டே சென்றால் போன் வழக்கம் போல் செயல்படும். ஆனால் கடன் கட்ட தவறினால் அந்த செயலி மூலம் போனின் இயக்கம் முழுமையாக முடக்கப்படும். அதாவது அழைப்பு செய்வது, இணையம் பயன்படுத்துவது, அத்தியாவசிய வசதிகள் எதுவும் இயங்காது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தங்களுடைய கடனை திருப்பி செலுத்த நேரிடும். ஆர்பி.ஐ வட்டாரங்கள் கூறுகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள் நிதி ஒழுக்கத்தை அதிகமாக கடைபிடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் கட்டாதவரின் செல்போன் முடக்கப்பட்டால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய பயன்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட தகவல்கள் தனியுரிமை பாதுகாப்பு குறித்தும் சந்தேகம் இருந்துள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்தும் முன் நுகர்வோரின் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் தகவல் ரகசியம் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஆர்.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் 140 கோடி மக்கள் தொகையுடன் சுமார் 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன என டிராய் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் செல்போன் கடன்களை சுற்றியுள்ள இந்த புதிய மாற்றம் மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.