ஜம்மு காஷ்மீரில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்ததாவது — ஹரியானாவில் இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து முதலில் 360 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கூறப்படுகிறது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில், சுமார் 2,900 கிலோ வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இது ஒரே இடத்தில் மட்டுமல்ல. ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களிலும், ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மத சார்ந்த அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்களாகவும், சிலர் மாணவர்களாகவும், மேலும் ஒருவர்மட்டும் மருத்துவராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பறிமுதல் செய்யப்பட்ட 2,900 கிலோ வெடிமருந்துகள் மட்டுமல்லாமல், ஏகே–58 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் — விசாரணையின் தொடக்கக் கட்டத் தகவலின்படி, இவர்கள் இந்த வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.
மேலும், இவர்கள் மாநிலங்களுக்கு இடையே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் பணியிலும், வெடிமருந்துகளை கடத்தும் பணியிலும் ஈடுபட்டு வந்ததாகவும், சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் வெடிமருந்துகள் மட்டுமல்லாது, வெடிக்க பயன்படும் பேட்டரிகள், வயர்கள் மற்றும் பிற உபகரணங்களும் அடங்கியுள்ளன.
இது மிகப் பெரிய தீவிரவாதச் சதியை முறியடித்த முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இந்தப் பொருட்கள் அனைத்தும் கடந்த 15 நாட்களுக்குள் இப்பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய அளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதை முன்னிட்டு, மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








