வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய வசதி ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சர்வதேச திசைகளுக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானங்களில் இனிமேல் தென்னிந்திய மற்றும் இந்தியாவின் சிறப்பு உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, சென்னை–துபாய், சென்னை–சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச சேவைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த உணவு பட்டியல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், சென்னையிலிருந்து மும்பை, டெல்லி வழியாக பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் சர்வதேச பயணிகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு வழங்கப்பட உள்ள உணவுகளில் தென்னிந்திய சுவைமிக்க வகைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டின் பிரபலமான மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மேலும் தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி ஆகிய மூன்று வகை சட்னிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதோடுடன், விமானப் பயணிகளின் விருப்பத்தை கருத்தில் கொண்டு பல்வேறு பிரியாணி வகைகள், மலபாரி சிக்கன் கறி, சிக்கன் பிம்பாப், வடஇந்திய சைவ–அசைவ உணவுகள், ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய உணவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சிறப்பு சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்படும் இவ்வுணவுகள் சுடசுட விமானத்தில் நேரடியாக வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதே நேரத்தில், பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை டிக்கெட் முன்பதிவு செய்யும் போது முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். சைவமா, அசைவமா? எந்த வகை உணவு வேண்டும்? என்ற விருப்பத்தையும் அப்போது குறிப்பிட்டால், அதன்படி பயணிகளின் இருக்கைகளுக்கு உணவுகள் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த சிறப்பு உணவு வசதி சர்வதேச விமானப் பயணிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளுக்கு இது இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால், மிக விரைவில் உள்நாட்டு ஏர் இந்தியா சேவைகளிலும் இதுபோன்ற உணவு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது








