இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீது நம்பிக்கை வைக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் ஒரு புதிய சிம் கார்டையும் விற்க முடியாமல் திணறி வருகிறது.
இதனால் புதிய கனெக்ஷன் வாங்க விரும்புவோரும், சிம் கார்டு தொலைந்து டூப்ளிகேட் சிம் பெற நினைப்பவர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த திடீர் முடக்கத்திற்கான காரணம் என்ன என விசாரித்தபோது, நம்ப முடியாத ஒரு தகவல் வெளிவந்துள்ளது. புது சிம் கார்டு வழங்குவதற்கும், வாடிக்கையாளர்களின் KYC விவரங்களை பதிவு செய்வதற்கும் பிஎஸ்என்எல் பயன்படுத்தி வந்தது சஞ்சார் ஆதார் என்று அழைக்கப்படும் ஒரு செயலியை.
இந்த செயலியை உருவாக்கி பராமரித்து வந்த தனியார் நிறுவனத்திற்கு, கடந்த நான்கு மாதங்களாக பிஎஸ்என்எல் கட்ட வேண்டிய பணத்தை செலுத்தவில்லையாம். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி சேர்ந்து, ஒப்பந்தம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்தவுடன், அந்த நிறுவனம் இரவு நேரத்திலேயே செயலியை முடக்கியதாக தெரியவந்துள்ளது.
சஞ்சார் ஆதார் செயலி முடங்கியதால், பிஎஸ்என்எல் ஊழியர்களால் எந்த புதிய சிம் கார்டையும் செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக் செல்கிறார்கள்.
ஏற்கனவே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் போராடி வரும் பிஎஸ்என்எல், இந்த புதிய சிக்கலால் புதிய வாடிக்கையாளர்களையும் இழக்கும் ஆபத்தில் உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனம் சொந்தமாக ஒரு புதிய செயலியை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் உள்ள பிஎஸ்என்எல் ஐடி குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், மிக விரைவில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு சிம் கார்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதுவரை, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது என்பது தற்போது கசப்பான உண்மை.








