Home இந்தியா “வங்கி மெகா கொள்ளை: மகாராஷ்டிராவில் தங்க நகை மற்றும் பணம் மீட்பு”

“வங்கி மெகா கொள்ளை: மகாராஷ்டிராவில் தங்க நகை மற்றும் பணம் மீட்பு”

கர்நாடகாவின் எஸ்பிஐ வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தின் ஒரு பகுதியை மகாராஷ்டிராவில் உள்ள பாழடைந்த வீட்டின் மேற்கூரையிலிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

7 கிலோ வெள்ளி மற்றும் 41 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மீதி பணமும் நகைகளும் எங்கே?அதை கொள்ளையடித்த கும்பலும் எங்கே? கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டம்  சடசான் நகரில் எஸ்பிஐ வங்கிக்குள் கடந்த 16 ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் முகமூடி அணிந்த மூன்று பேர் நுழைந்தனர்.

வங்கி பணிநேரம் முடிந்து வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட கொள்ளை கும்பல் அங்குள்ள ஊழியர்களை கட்டி போட்டு லாக்கரில்லிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொத்து கொத்தாக கொள்ளை அடித்துள்ளனர்.

அதில் 20 கிலோ எடை உள்ள தங்க நகைகளும் அடங்கும். சினிமா படபாணியில் வங்கியில் நடந்த மெகா கொள்ளையால் கர்நாடகாவே கதிகலங்கி போனது. கொள்ளையில் ஈடுபட்டது யார்? எங்கிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

வங்கி சிசிடிவி கேமராவில் தொடங்கி கொள்ளையர்கள் தப்பிச் சென்ற ரூட்டில் வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வங்கி கொள்ளையர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற துப்பு கிடைத்தது. அப்போதுதான் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது.

மகாராஷ்டிராவின் உள்ள கிராமத்தில் பாழடைந்த வீட்டின் மீது சந்தேகத்துக்கு இடமான பை ஒன்று இருப்பதை கவனித்த அப்பகுதியினர் மங்கள கேடா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு சென்ற போலீசார் மர்ம பையை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் 7 கிலோ தங்க நகைகளும் 41 லட்சம் ரூபாய் ரொக்கமும் இருந்துள்ளது.

கர்நாடகாவின் எஸ்பிஐ வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகைகளாக இருக்கலாம் என கருதி விஜயபுரா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த கிராமத்தினரிடம் விசாரித்தபோது காரில் வந்து அடையாளம் தெரியாத நபர்கள் பைக் மீது மோதி தகராறு செய்ததுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பியதாக கூறியுள்ளனர்.

அந்த நபர்களை பாழடைந்த வீட்டின் கூரையில் நகை பணத்தை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என கிராமத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். இதனால் கொள்ளையர்கள் மகாராஷ்டிராவிற்குள் தான் பதுங்கி இருக்கக்கூடும் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

முக்கிய துப்பு மற்றும் அடையாளங்கள் சிக்கியிருப்பதால் அக்கொள்ளை கும்பல் விரைவில் பிடிபடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.