சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவு வைரலாகி வரும் நிலையில், அது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தொடர் தொடங்கும் போதும், சென்னை அணியின் கேப்டனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் தோனியின் ஓய்வு குறித்து பேசப்பட்டு வருகிறது. 44 வயதை எட்டியிருக்கும் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இருப்பினும் கடந்த சில சீசன்களாகவே தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் எழுந்தாலும், அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி முதல் கட்டமான பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. ஏற்கனவே அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் வெளியேறியதைத் தொடர்ந்து தோனியே மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.
அப்போது தோனியின் ஓய்வு தொடர்பான பேச்சுகள் மேலும் அதிகரித்தன. 43 வயதான அவர் கடைசி பேட்டிங் வரிசையில் களமிறங்கியது, இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது. எனினும், ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, “இந்த ஐபிஎல் முடிந்த பிறகு என் உடல் தகுதி தாங்குமா என்பதை பார்க்க இன்னும் 6 முதல் 8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்போது முடிவு செய்ய ஒன்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அடுத்த ஐபிஎல், அதாவது 2026 சீசனில் தோனி விளையாடுவதை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் இதற்கு முன் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோ பதிவில், “தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா?” என்று பல்வேறு மொழிகளில் ரசிகர்கள் போன் செய்து கேட்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதற்கு பதிலளிக்கும் வகையில், “One Last Time” என்பதை மோர்ஸ் கோட் வடிவில் குறிப்பிட்டு சென்னை அணி பதிவு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டாலும், அது தான் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்பது கூறப்படுகிறது. சிஎஸ்கே வெளியிட்டுள்ள இந்த பதிவு, ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








