அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையூர் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து மரகத லிங்கம் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த இளையூர் கிராமத்தில் மிகவும் பழமையான காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாக மரகத லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கிராம மக்கள் அதனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த மரகத லிங்கத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு இந்த மரகத லிங்கம் திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அதை திருடிச் சென்ற வழியிலேயே அவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் சுமார் ஏழு நாட்கள் கழித்து, அந்த மரகத லிங்கத்தை திருடர்கள் மீண்டும் கோயிலில் வைத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்று பிரதோஷம் பூஜை நடைபெற்றிருந்த நிலையில், இன்று காலை பூசாரி கோயிலை திறந்தபோது மரகத லிங்கம் காணவில்லை என்பதை கவனித்துள்ளார். இதையடுத்து, கிராம மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








