மகளீர் உரிமைத் தொகை திட்டத்தில் குறைகளைத் தீர்ப்பதற்காக கியூஆர் குறியீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மாதந்தோறும் 1.13 கோடி மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 2023 செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது.
புதிய பயனாளிகளைச் சேர்க்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டன. புதிதாக திட்டத்தில் சேர 25 லட்சம் பேர் மனு அளித்தனர். அதில் 16.99 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு, இரண்டாம் கட்டமாக திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 1.30 கோடியாக அதிகரித்துள்ளது. மனு அளித்தும் தகுதியான ஆவணங்களைச் சமர்ப்பித்தும் பலருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, தகுதி உள்ள பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முறையீடு செய்வதற்காக கியூஆர் குறியீடு மற்றும் இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தங்களது குறைகளைப் புகாராக பதிவு செய்ய விண்ணப்பதாரர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.








