அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 லட்சத்து 5000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஐந்தாவது கட்டமாக காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பங்கேற்றதுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பள்ளி குழந்தைகள் வரவேற்றனர் பின்னர் குழந்தைகளுக்கு முதலமைச்சர் சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தார்.
மாணவ மாணவிகளின் சார்பாக மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. விழா நிகழ்விடத்தில் மாணவ மாணவிகள் அனைவரும் புன்னகையோடு சிறப்பான வரவேற்பினை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் புத்தகங்களை கொடுத்து வரவேற்றார்.
இதனை அடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்குகளை இரு மாநில முதலமைச்சர்களும் பார்வையிட்டனர் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள காட்சி அரங்கை அவர்கள் பார்வையிட்டனர்.
இதனை அடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் காலை உணவை பரிமாறி காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் குழந்தைகளுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பஞ்சாப் மாநில முதலமைச்சர்பகவந்த் மான் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவருந்தினர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2430 பள்ளிகளில் 3 லட்சடதது 5000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் ஐந்தாவது கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காலையில் குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டவுடன் எனர்ஜி வந்துவிட்டதாகவும். இன்றைய நாள் மனதிற்கு நிறைவாக அமைந்ததாகவும் நெகிழ்ந்து பேசினார்.
20 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகிறார்கள் என்பதை விட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும் என்று கூறிய அவர் அறிவு பசியை மட்டுமல்லாமல் வயிற்றுப் பசியையும் பள்ளிகள் போக்க வேண்டும் என்றும் கூறினார்.








