வானியல் ஆர்வலர்களுக்கு சூப்பர் செய்தி! கடந்த மாதம் வானத்தை அலங்கரித்த அந்த பிரம்மாண்டமான சூப்பர் மூனை ரசித்தீர்களா? ஒருவேளை அந்த வாய்ப்பை தவறவிட்டிருந்தால் கவலைப்பட வேண்டாம். இயற்கை உங்களுக்காக இன்னொரு மெகா சந்தர்ப்பத்தை தர இருக்கிறது. ஆம், 2025 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நம்மை வியப்பில் ஆழ்த்தத் தயாராகி வருகிறது.
வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் என்பதால், டிசம்பர் மாதப் பௌர்ணமிக்கு ‘கோல்ட் மூன்’ (குளிர் நிலவு) என்று அழகான பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 5ஆம் தேதி, இந்த கோல்ட் மூன் வானில் 100% முழுமையாக உதயமாகி இரவை பகலாக மாற்றும். இது ஒரு சாதாரண பௌர்ணமி அல்ல. பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றும் நிலவு, பூமிக்கு மிக அருகில் — சுமார் 3,63,000 கிலோமீட்டர் தூரத்தில் — வந்தபோது தான் இந்த சூப்பர்மூன் அதிசயம் நிகழ்கிறது.
நவம்பர் மாத பீவர் மூன் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிலா என்றாலும், இந்த டிசம்பர் நிலவும் அதற்கு சற்றும் குறைவில்லை. இது இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய மற்றும் மிக பிரகாசமான நிலவாகும். நாசா கணிப்புப்படி, ஆண்டின் மிகச் சிறிய நிலவை ஒப்பிடும்போது, இந்த கோல்ட் மூன் 14% அதிகப் பெரியதாகவும், 30% அதிக பிரகாசமாகவும் காணப்படும்.
இந்த அதிசயத்தை எப்போது, எப்படி பார்க்கலாம்?
சூரியன் மறைந்த பிறகு மாலை நேரத்தில் நிலவு அடிவானத்தில் உதயமாகும். அந்த தருணத்தைப் பார்ப்பதுதான் சிறந்தது. Moon Illusion எனப்படும் நிகழ்வால், நிலவு அடிவானத்தில் இருக்கும் போது வழக்கத்தை விட பெரியதாகத் தோன்றும். இது கண்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தைப் பரிசளிக்கும்.
இந்த நிலவுக்கு கோல்ட் மூன் மட்டும் அல்ல; வரவிருக்கும் ஆண்டின் மிக நீண்ட இரவான குளிர்கால சங்கிராந்தி நெருங்குவதால் இதற்கு ‘நீண்ட இரவுகளின் நிலவு’ என்றும் பெயர் உண்டு. மேலும் பணிநிலவு, மரங்கள் வெடிக்கும் நிலவு போன்ற சுவாரசியமான பெயர்களும் இதற்குண்டு.
நிலவு பூமிக்கு மிக அருகில் வருவதால், அதன் ஈர்ப்பு விசையின் விளைவாக கடல் அலைகள் வழக்கத்தை விட சற்று அதிக வேகத்திலும் சீற்றத்திலும் காணப்படும். எனவே கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குவது நல்லது.
மொத்தத்தில், 2025ஆம் ஆண்டின் கடைசி வானியல் அற்புதம் நம்மை பிரம்மிக்க வைக்க காத்திருக்கிறது. இந்த வாய்ப்பை யாரும் தவறவிடாதீர்கள். உங்கள் மொட்டைமாடி அல்லது பால்கனியில் நின்று இந்த கோல்ட் மூனை கண்டிப்பாக ரசிக்கவும்!








