80 ஆயிரம் பேரும் கண் இமைக்காமல் ஒருவரை நோக்கிக் கொண்டிருந்தனர். அந்த இடம் முழுவதும் மயான அமைதியில் மூழ்கியிருந்தது. அங்கு தாலிபான்கள் என்ன செய்தனர்?
ஆப்கானிஸ்தான் நாட்டில், 13 பேரைக் கொலை செய்த குற்றவாளியை மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கினர்.
இந்த தண்டனையை ஒரு சிறுவன் நிறைவேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக் கொலை செய்த குற்றவாளிக்கு, ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தாலிபான் ஆட்சியாளர்களும் அனுமதி அளித்தனர். அதன் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. மொத்தம் ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அப்போது அங்கு கூடியிருந்த 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் மத முழக்கங்களை எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் உலகளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் என்றும், சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்பு தொடர்பாளர் ரிச்சர்ட் பென்னெட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
2021ல் தாலிபான் ஆட்சி அமைந்தபின் பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட 11வது மரண தண்டனை இது என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னைய ஆட்சியில், குற்றவாளிகளுக்கு மக்கள் முன்னிலையில் கல்லெறிதல் மற்றும் சவுக்கடி போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.








