ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தாலிபன்களுக்கு பயந்து ஆப்கான் மக்கள் சிலர் தப்பித்து செல்வதற்காக அமெரிக்க விமானப்படை விமானத்தின் மேல் பகுதியில் சிலர் அமர்ந்தனர். அப்போது விமானம் மேலே செல்ல புறப்பட்டபோது சிலர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த அளவில் 13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் லேண்டிங் கியரில் தொற்றிக்கொண்டே விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானின் காவல் பகுதியில் அமைந்துள்ள ஹமித் கர்சாய் விமான நிலையத்திலிருந்து RQ401 என்ற பதிவின் கொண்ட ஏர்பஸ் A340 மாடல் விமானம் பயணிகளை ஏற்றுக்கொண்டு காலை 8:46 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானம் சரியாக காலை 10:20 மணிக்கு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்தது.
அப்போது அந்த விமானத்திற்கு அருகே குர்தா அணிந்திருந்த 13 வயது சிறுவன் சுற்றி திரிந்து வருவதை கண்ட பாதுகாப்பு படையினர் அவனைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது காபூல் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த 13 வயது சிறுவன் ஆர்வ மிகுதியால் விமானத்தின் லேண்டிங் கியர் உள்ள இடத்தில் அமர்ந்து ஒளிந்து கொண்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிட்டத்தட்ட பல ஆயிரம் அடியில் விமானம் சென்று கொண்டிருந்த போது சிறுவன் உயிர் பிழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் 94 நிமிடங்கள் வெளியே தொற்றி கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது என்பதுடன் சாத்தியமும் இல்லை என்ற நிலையில் இந்த பயணம் பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
30,000 அடியில் விமானம் செல்லும்போது வெப்பநிலை -40 முதல் -60 டிகிரி என இருப்பதால் சிறுவன் சுயநினைவை இழந்த நிலையில் தான் பயணம் செய்திருக்க முடியும் என்கிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் ஐந்தில் ஒரு நபர் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதே போன்றது ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளதா என கேட்டால் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி இதே போன்றது ஒரு சம்பவம் நடந்துள்ளது. டெல்லியிலிருந்து லண்டன் நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 747 ரக விமானத்தில் 22 வயதான பிரதீப் சைனி மற்றும் அவரது தம்பி 19 வயதான விஜய் சைனி இருவரும் விமானத்தின் சக்கரத்தில் தோற்று கொண்டு பயணித்திருக்கிறார்கள்.
லண்டன் ஹித்ரு விமான நிலையம் வந்தடைந்தபோது விஜய் சைனி உயிர் இழந்துள்ளார். ஆனால் அவரது அண்ணன் பிரதீப் சைனி உயிர் பிழைத்துள்ளார். ஆகவே இதுவே விமான சக்கரத்தில் பயணித்து உயிர் பிழைத்த இந்தியாவில் நடந்த முதல் சம்பவம் என்றும் தற்போது ஆப்கான் சிறுவன் உயிர் பிழைத்தது இரண்டாவது சம்பவம் எனவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக சிறுவன் இவ்வாறு வந்த நிலையில் சிறுவன் என்பதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் அவன் வந்த அதே விமானத்தில் மதியம் 12:30 மணிக்கு அவனது சொந்த நாட்டிற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.








